Published : 29 Apr 2021 07:47 PM
Last Updated : 29 Apr 2021 07:47 PM
ஏபிபி - சி வோட்டர் (ABP - C Voter) இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், திமுக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல், புதுவை, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்டவை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 8 கட்டமாகவும், அசாமில் 3 கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
பொதுவாக தேர்தல் முடிந்த பின்னர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு அன்று மாலையே வெளியாகும். இம்முறை மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்ததால், அந்தத் தேர்தல் முடிந்த பின்னரே கருத்துக்கணிப்பு வெளியாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் மற்ற மாநிலங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என பெரும்பாலான ஏஜென்சிகள் தெரிவித்தன. திமுக தனியாக 140 இடங்களுக்கு மேல் பெறும், கூட்டணி 160 முதல் 180 இடங்கள் வரை பெறும் எனவும் கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அதிமுக கூட்டணி 60 இடங்கள் வரை பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் கடைசிக்கட்டத் தேர்தல் இன்றுடன் (ஏப். 29) முடிவடைவதால் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பான 'எக்சிட் போல் இன்று (ஏப்ரல் 29) மாலை 7 மணியளவில் வெளியாகின.
இதில் ஏபிபி - சி வோட்டர் (ABP - C Voter) இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு விவரத்தின்படி திமுக, அதிமுக கூட்டணிகள் பெறும் எனக் கணிக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை விவரம்:
திமுக கூட்டணி - 166 தொகுதிகள்
அதிமுக கூட்டணி - 64 தொகுதிகள்
அமமுக கூட்டணி - 1 தொகுதி
மக்கள் நீதி மய்யம் கூட்டணி - 1 தொகுதி
மற்றவை - 2 தொகுதிகள்
இதன்படி, திமுக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றும் என, இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
வாக்கு சதவீதம்:
திமுக கூட்டணி - 46.70%
அதிமுக கூட்டணி - 35%
மநீம - 4.10%
அமமுக கூட்டணி - 3.80%
மற்றவை - 10.40%
மேலும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வட தமிழக மண்டலத்தில் அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை அதன் எண்ணிக்கையை திமுக அதிகரித்திருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த முறை 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, இம்முறை 8 முதல் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும், 25 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 2021 தேர்தலில் 36 முதல் 38 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் இக்கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களையும், 52 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கொண்டது கொங்கு மண்டலம். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் கொங்கு மண்டலத்தில் மட்டும் 33-35 வரையிலான சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி கொங்கு மண்டலத்தில் 17-15 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கைப்பற்றும் எனத் தெரியவந்துள்ளது.
சென்னை மண்டலத்தில் திமுக 11 முதல் 13 இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிமுக 3 முதல் 5 தொகுதிகளைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT