Published : 29 Apr 2021 05:13 PM
Last Updated : 29 Apr 2021 05:13 PM

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூட்டமாகக் கூட வேண்டாம்; கொண்டாட்டங்கள் கூடாது: அரசியல் கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை

வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும். உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாவது பரவல் தீவிரமாகி வருவதை அடுத்து, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், ரெம்டெசிவர், தடுப்பூசி மருந்து பற்றாக்குறை நிலவி வருவதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, மே 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கலாம் எனத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு பரிந்துரைத்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “வாக்கு எண்ணிக்கை குறித்து தேர்தல் ஆணையமும், அரசும் ஆலோசித்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்துப் பத்திரிகைகளில் விரிவான விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கைக்குப் பின் அரசியல் கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க, 48 மணி நேரத்துக்கு முன் கரோனா சோதனை செய்திருக்க வேண்டும் அல்லது இரு தவணை தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில், கிருமி நாசினி பயன்படுத்துவது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 2ஆம் தேதி அரசு அறிவித்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அதே நேரம் மே 1ஆம் தேதியைப் பொறுத்தவரை, அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படாது என்பதால், அதிக அளவில் மக்கள் நடமாட்டம் இருக்காது என்பதால் அன்றைய தினம் முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை.

மேலும், மே 1ஆம் தேதி அன்றுதான் 18 முதல் 45 வயதுடையோருக்கான தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளதால் அதை நிறுத்த முடியாது” எனக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, ஊடகத்தினருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். “வாக்கு எண்ணிக்கை அன்று ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடகத்தினர் பெரும் எண்ணிக்கையில் குவிவார்களே, அதற்கு என்ன தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்” என்று நீதிபதிகள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், “ஊடகத்தினருக்கும் அதே வகையிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனை செய்து தொற்றில்லை என்ற சான்றிதழ் அல்லது தடுப்பூசி போட்ட ஊடகத்தினருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். இதுபற்றிய முழு விவரங்களை நாளை தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

இதை ஏற்று வழக்கு விசாரணையை நாளைக்கு (ஏப்.30) தள்ளிவைத்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூட்டமாகக் கூட வேண்டாம் எனவும், கொண்டாட்டங்களிலும், ஊர்வலங்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் அரசியல் கட்சியினரைக் கேட்டுக் கொண்டனர்.

மே 1, 2 தேதிகளில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து யோசனை தெரிவித்ததாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது சம்பந்தமாக அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x