Published : 29 Apr 2021 04:55 PM
Last Updated : 29 Apr 2021 04:55 PM
தமிழ்நாட்டில் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் உள்ளிட்டோருக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு 3,292 வாக்குச்சாவடிகளில் ஏப்.6-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஆண்கள் 11,35,740 பேரில் 8,42,240 பேரும், பெண்கள் 12,02,728 பேரில் 8,77,897 பேரும், இதரர் 237 பேரில் 58 பேரும் என மொத்தம் 17,20,195 பேர் வாக்களித்திருந்தனர். இதன்படி, திருச்சி மாவட்டத்தில் 73.56 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில், மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு ஜமால் முகம்மது கல்லூரியிலும், லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளுக்கு சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியிலும், முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளுக்கு கண்ணனூர் இமயம் பொறியியல் கல்லூரியிலும், மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளுக்கு திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.
இதனிடையே, வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்லும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள போலீஸார் ஆகிய அனைவரும், வாக்கு எண்ணிக்கை நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக கரோனா பரிசோதனை செய்து, கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று பெற்றிருந்தால் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கட்சியினரும் கரோனா பரிசோதனைக்கு வந்ததால், அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் பரபரப்புடன் காணப்பட்டன. அலுவலகங்களுக்கு வெளியே ஏராளமான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதுகுறித்து அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் கூறும்போது, “வாக்கு எண்ணிக்கைக்காக ஒவ்வொரு தொகுதி மையத்திலும் தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு வேட்பாளருக்கு அதிகபட்சம் 14 முகவர்கள் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கலாம். இதனிடையே, வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில், முகவர் அனுமதிச் சீட்டில் கையெழுத்திடவும், கரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் இன்று வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி, இன்று எங்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT