Published : 29 Apr 2021 03:37 PM
Last Updated : 29 Apr 2021 03:37 PM

வைத்தீஸ்வரன் கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் பங்கேற்பின்றி குடமுழுக்கு விழா

மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன்கோயில் வைத்யநாத சுவாமி கோயிலில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் பங்கேற்பின்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில், தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீ வைத்யநாத சுவாமி, ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமி கோயிலில், தனி சன்னதிகளில் செல்வ முத்துக்குமார சுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். தீராத நோய்களைத் தீர்க்கும் தலமாக இக்கோயில் விளங்கி வருகிறது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழக அரசின் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, பக்தர்கள் பங்கேற்பின்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவையொட்டி 8 கால யாக சாலை பூஜைகள் 24-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தன.

யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இன்று காலை வைத்தீஸ்வரன் கோயிலில், நான்கு ராஜகோபுரங்கள், கற்பக விநாயகர், வைத்தியநாத சுவாமி, தையல் நாயகி அம்பாள், செல்வ முத்துக்குமார சுவாமி, அங்காரகன் ஆகிய சுவாமிகளுக்கும், மூலவர் விமானங்கள் விமானக் கலசங்களுக்கும் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற குடமுழுக்கு விழா நடைபெற்றது. கோவில் கும்பாபிஷேகத்தைக் கண்காணிக்க உயர் நீதிமன்றத்தால் ஐஏஎஸ் அதிகாரி விக்ராந்ராஜா, உயர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தனர்.

144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்ததால் பக்தர்கள் நகருக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. விழாவில், தருமபுர ஆதினம் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக் குமார் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x