Published : 29 Apr 2021 03:23 PM
Last Updated : 29 Apr 2021 03:23 PM
கூடலூர் வனக்கோட்டத்தில் மனித - விலங்கு மோதலை தடுக்க புதிய முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து மக்களுக்கு தெரிவிக்க முன்னெச்சரிக்கை கருவிகள், வாட்ஸ் அப் ஆகிய தொழில்நுட்பங்களை வனத்துறை பயன்படுத்தி வருகிறது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர், பந்தலூர் தாலுகாவில் அண்மைக்காலமாக மனித - விலங்கு மோதல் அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் 50க்கும் மேற்பட்டோர் காட்டு யானை தாக்கி இறந்துள்ளனர். மேலும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை நாசம் செய்வதோடு, குடியிருப்பு வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் வனத்துறையினர், பொதுமக்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பல்வேறு போராட்டங்கள் வனத்துறைக்கு எதிராக நடைபெற்று வந்தன.
குறிப்பாக மனித - விலங்கு மோதல் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைபெறுவதால் யானைகள் தாக்கி தோட்டத் தொழிலாளர்கள் உயிர் இழப்பு அதிகளவில் ஏற்படுகிறது.
இதனைத் தடுக்க வனத்துறையினர் கூடலூர் , பந்தலூர் தாலுகாவில் முதல் கட்டமாக யானைகள் கிராமப் பகுதிக்குள் நடமாடும் 30 இடங்களை கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் அதிநவீன கேமரா யானைகள் வருகையை பதிவு செய்வதுடன், யானை வந்துள்ள பகுதி குறித்து மாவட்ட வன அலுவலர், வனசரகர்கள், யானை விரட்டும் குழுவினர் வரை குறுஞ்செய்தி சென்றடையும்.
யானை அந்தக் கருவியை கடந்து செல்லும் போது ஒலி எழுப்பும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி குறைந்தது 10 நிமிடம் ஒலி எழுப்பும். அப்போது அப்பகுதி மக்கள் யானை வருவதை உணர்ந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்குள் குறுஞ்செய்தியை கண்ட வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து யானைகளை விரட்டுவார்கள்.
இந்த புதிய முயற்சி இந்தியாவிலேயே முதல்முறையாக கூடலூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் கூறும் போது, ”கேரள வனப்பகுதியில் இருந்து தமிழக கிராமப் பகுதிக்குள் காட்டு யானைகள் ஊடுருவும் ஒரு சில முக்கிய வழித்தடங்களில் ஏர்லி வார்னிங் சிஸ்டம் கருவிகளை கேமராவுடன் பொருத்தி உள்ளோம். இரவு நேரங்களில் இப்பகுதிக்கு வரும் காட்டு யானை கருவியை கடந்து செல்லும்போது அந்த கருவியில் உள்ள சென்சார் மூலம் கருவிக்கு தகவல் கிடைத்ததும், அதிலிருந்து ஒரு ஒலி எழுப்புகிறது.
இந்த ஒலியை வைத்து அப்பகுதிக்கு காட்டு யானை வந்திருப்பதை அருகில் உள்ளவர்கள் அறிந்து கொள்ள முடியும். இதனையடுத்து யானை அப்பகுதிகளில் செல்லும் இடங்களில் வசிப்பவர்களுக்கு காட்டு யானை வந்திருப்பது குறித்து தகவல் கொடுக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கருவியை கடந்து செல்லும் வனவிலங்கு குறித்த படங்களும் அதில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகும்” என்றார்.
இந்நிலையில் சேரம்பாடி கூடலூர் பிரதான சாலையில் சுங்கம் பகுதியிலுள்ள பிசிஎல்சி கிறிஸ்தவ தேவாலய பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஏர்லி வார்னிங் சிஸ்டம் கருவியை காட்டுயானை ஒன்று கடந்து செல்வதும், அதில் கிடைத்த சிக்னல் மூலம் கருவியிலிருந்து ஒலி எழும்பியதும், யானை பயந்து வேகமாக அங்கிருந்து நகரும் காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன. கேமராவில் பதிவான காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
வனத்துறையினரின் இந்த முயற்சி மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளதால், முயற்சி வெற்றியடைந்துள்ளது. இதனால், மனித-யானை மோதல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT