Published : 29 Apr 2021 02:28 PM
Last Updated : 29 Apr 2021 02:28 PM

முகவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்; உடல் வெப்பம் அதிகம் இருந்தால் அனுமதி இல்லை: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை

முகவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வருவோர் உடல் வெப்பம் அதிகம் இருந்தால் அனுமதி இல்லை என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டத்தில் கடந்த 20 நாட்களில் கரோனா இரண்டாவது அலை பரவல் மிக அதிக அளவில் உள்ளது. கரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கை அன்று கடும் கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் வாக்கு எண்ணிக்கையைத் தடை செய்ய நேரிடும் என உயர் நீதிமன்றம் கடந்த வாரம் எச்சரித்தது.

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று ஊரடங்கு இல்லை என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருந்த நிலையில், ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ள நிலையில் இருவேறு அறிவிப்புகளால் குழப்பம் நீடித்தது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள், வேட்பாளர்கள், செய்தியாளர்கள் மூன்று நாட்களுக்கு முன்னரே கரோனா பரிசோதனை செய்து தொற்றில்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் அல்லது தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அவ்வாறு இல்லாமல் வருபவர்களுக்கும், தொற்றுள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

''வாக்கு எண்ணிக்கையின்போது மேசைகளின் எண்ணிக்கையில் 14 முதல் 30 மேசைகள் இருக்கும் சில இடங்களில் மாற்றம் இருக்கலாம். பெரும்பாலும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. சில இடங்களில் மட்டுமே மாற்றம் இருக்கலாம்.

வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை உள்ளது. அன்று முழு ஊரடங்கு குறித்து அரசுதான் முடிவெடுக்கும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்டவை இருக்கும்.

தற்போது வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கரோனா பரிசோதனை செய்து தொற்றில்லை என்கிற சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இவை இருந்தாலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மருத்துவர்கள் இருப்பார்கள். அவர்கள் அங்கு வருபவர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பார்கள். உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், தனிமைப்படுத்தப்படுவார்கள்'' என்று சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

முகவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்பதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x