Published : 29 Apr 2021 12:17 PM
Last Updated : 29 Apr 2021 12:17 PM
சென்னையில் தடுப்பூசி போடவும், தடுப்பூசி மையங்கள் குறித்து அறியவும், தொற்று ஏற்பட்டால் ஸ்க்ரீனிங் சென்டர், பிசிஆர் பரிசோதனை உள்ளிட்டவற்றை அறியவும் சென்னை மாநகராட்சி ஒரே குடையின்கீழ் அனைத்துத் தகவல்களும் அடங்கிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது என ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:
“ 380 இடங்களில் சென்னை மாநகராட்சி சார்பில் தடுப்பூசி போடப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகள் மூலமும், நாங்களே நேரடியாகச் சென்று அபார்ட்மென்ட்டுகளிலும் தடுப்பூசி போடுகிறோம். பெரிய மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுகிறார்கள்.
ஆனால், வீட்டுக்கு அருகிலேயே மையங்கள் உள்ளதால் எதற்காக அவ்வளவு தூரம் போகவேண்டும். தடுப்பூசி மையங்களில் பொது மருத்துவமனைகளில் குவிவதால் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளதால் அருகாமையில் உள்ள தடுப்பூசி மையங்களில் போடவேண்டும்.
தற்போது மூன்று, நான்கு தெருக்களுக்கு ஷாமியானா போட்டு அங்கேயே தடுப்பூசி போடுகிறோம். அரசு அலுவலகங்கள், வங்கி மையங்களில் மொத்தமாகப் போட்டுள்ளோம். அதனால் அரசு மருத்துவமனையில்தான் தடுப்பூசி போடுவோம் என்கிற எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டுமே ஒரே அளவு தன்மை கொண்ட தடுப்பூசிகள்தான். ஆகவே, குழப்பம் வேண்டாம். இரண்டுக்குமே ஒரே வகையான குணம் உண்டு. நாங்கள் அனைவரும் இரண்டு வகையான தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றைப் போட்டவர்களாக உள்ளோம். அதிக அளவில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆகவே, தயவுசெய்து என்ன தடுப்பூசிக்கு வாய்ப்பு உள்ளதோ அதைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தடுப்பூசி போட்டவர்களுக்கு, முதல் தவணை போட்டவர்களுக்குத் தொற்று பாதிப்பில்லை, வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பில்லை. இரண்டாவது டோஸ் போட்டால் பாதிப்பு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. கும்பலாகப் பொதுமக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டும் மீறும் கல்யாண மண்டபங்களை மூடி சீல் வைத்துள்ளோம்.
அதேபோன்று பேருந்துகளில் பொதுமக்கள் அதிக அளவில் கட்டுப்பாட்டை மீறி கும்பலாகப் பயணிப்பதைத் தடுப்பது சிரமமாக உள்ளது. பொதுமக்களின் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுவது பேருந்து போக்குவரத்து மட்டுமே. காலை, மாலை குறிப்பிட்ட நேரத்தில் பணிக்குச் செல்வோர் ஒரே நேரத்தில் பயணிப்பதும் ஒரு பிரச்சினையாக உள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறையிடம் பேசி கூடுதல் பேருந்துகளை இயக்குவது குறித்துப் பேசுகிறோம்.
ஆனால் இது தீர்வல்ல. கூடுமானவரை வீட்டிலிருந்து பணியாற்றுவது, இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட சில தற்காலிக ஏற்பாடுகளைச் செய்துகொள்வது அரசு எடுக்கும் முயற்சிக்கு உதவும். சென்னையைப் பொறுத்தவரை ஆரம்பக் கட்டத்தில் இறப்பு விகிதம் ஆரம்பத்தில் 2%க்கு மேல் இருந்தது. அதன்பின்னர் எடுக்கப்பட்ட முயற்சி காரணமாக இறப்பு விகிதம் 1.4% ஆகக் குறைந்துள்ளது.
யாரும் மருத்துவ கவனிப்பு இல்லாமல் உயிரிழக்கக் கூடாது என்பதற்காக இத்தனை முயற்சிகள் எடுத்துவருகிறோம். மயானங்களைப் பொறுத்தவரை சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 240 மயானங்கள் உள்ளன. அதிகப்படியான பிணங்கள் வந்து மயானங்கள் நிரம்பி வழியும் நிலை இல்லை. வடமாநிலங்களில் உள்ளது போன்ற சூழ்நிலை கிடையாது.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை என்ன பிரச்சினை என்றாலும் புகார் செய்யலாம். உயிரிழந்தவர்கள் உடலைத் தரப் பணம் கேட்டதாக, இறுதிச்சடங்கு போன்ற காரியங்களுக்குப் பணம் கேட்டதாகப் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் கூறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, நான் என்ன செய்ய வேண்டும், தொற்று இருக்குமோ, யாரை அணுகுவது என்ற சந்தேகங்கள் பலருக்கும் உள்ளன. தொற்று பாதிப்பு வந்துவிட்டது என்றால் தற்போது 12 ஸ்க்ரீனிங் சென்டர்கள் உள்ளன. அங்கு எப்படிச் செல்வது என்பது குறித்தும், தடுப்பூசி மையங்கள் குறித்து கூகுள் மேப் வசதியுடன் போட்டுள்ளோம். இதற்கான ஒரே குடையின் கீழ் தெரிந்துகொள்ள இணையதளத்தை உருவாக்கியுள்ளோம்.
covid19.chennaicorporation.gov.in என்கிற இணையதளத்தில் நீங்கள் சென்று அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். அனைத்துவிதமான தகவல்களும் உள்ளன. இதுதவிர 104 என்கிற ஹெல்ப்லைன் எண்ணையும், சென்னை மாநகராட்சி ஹெல்ப்லைன் எண்ணையும் பயன்படுத்தினால் எளிதாக இருக்கும்”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT