Published : 29 Apr 2021 10:54 AM
Last Updated : 29 Apr 2021 10:54 AM
இந்தியா முழுவதும் நடந்த 5 மாநிலத் தேர்தலில், மேற்கு வங்கத்தின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்றுடன் முடிவுக்கு வருவதால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு (எக்சிட் போல்) இன்று மாலை வெளியாகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல், புதுவை, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்டவை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 8 கட்டமாகவும், அசாமில் 3 கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
பொதுவாக தேர்தல் முடிந்த பின்னர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு அன்று மாலையே வெளியாகும். இம்முறை மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்ததால், அந்தத் தேர்தல் முடிந்த பின்னரே கருத்துக்கணிப்பு வெளியாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் மற்ற மாநிலங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
மேற்கு வங்கத்தில் கடைசிக்கட்டத் தேர்தல் இன்றுடன் முடிவடைவதால் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பான ‘எக்சிட் போல்’ இன்று (ஏப்ரல் 29) மாலை 7.30 மணிக்கு வெளியாகிறது.
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பிரபல செய்தி நிறுவனங்கள் இன்று வெளியிட உள்ளன. இதில் எந்தக் கட்சி அதிக இடங்களைப் பெறும், திமுகவா, அதிமுகவா? என்கிற பரபரப்பு நிலவுகிறது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் சரியானவையாக இருந்தது இல்லை. ஒரு பரபரப்புக்காக வெளியிடப்படும். 2016ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் பல நிறுவனங்கள் திமுகவே வெற்றி பெறும் எனத் தெரிவித்த நிலையில் முடிவு வேறு மாதிரியாக அமைந்தது. அதிமுக வெற்றி பெற்றது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என பெரும்பாலான ஏஜென்சிகள் தெரிவித்தன. திமுக தனியாக 140 இடங்களுக்கு மேல் பெறும், கூட்டணி 160 முதல் 180 இடங்கள் வரை பெறும் எனவும் கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அதிமுக கூட்டணி 60 இடங்கள் வரை பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தேர்தலுக்குப் பின் அதிமுக 105 முதல் 120 இடங்கள் பெறும் என்று தகவல் வெளியானது. உளவுத்துறை அளித்த தகவலிலும் இது உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, மநீம, அமமுக தலைமையில் 4 அணிகள் தனித்தனியாக கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிட்டுள்ளன.
பாஜகவுடன் கூட்டணி, அமமுக வாக்குகளைப் பிரிக்கலாம், 10 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆட்சி ஆகியவை அதிமுக கூட்டணிக்குப் பாதகமாக இருக்கும் என்றும், இளைஞர்கள் வாக்கு மநீமவுக்கு, சீமான் கட்சிக்குச் செல்வது 4 அணிகளாகப் பிரிந்து நிற்பது உள்ளிட்டவை திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனாலும், தமிழகத்தில் எப்போதும் திமுக அல்லது அதிமுகவுக்கு (2006-ம் ஆண்டைத் தவிர) அறுதிப் பெரும்பான்மையுடனேயே ஆட்சியமைக்கும் வாய்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர். ஆகவே, வெற்றி பெறுவதும், பெரும்பான்மை பெறுவதும் சிக்கலாக இருக்காது என இரண்டு கட்சிகளும் கருதுகின்றன. 3-வது, 4-வது இடத்தை யார் பிடிக்கப் போகிறார்கள் என்கிற ஆர்வமும் அனைவரிடமும் உள்ளது.
தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு இன்று மாலை வெளியாக உள்ளது. இது அதிகாரபூர்வ முடிவும் அல்ல, தேர்தலைத் தீர்மானிக்கப் போவதும் அல்ல. வாக்கு எண்ணிக்கைக்குச் சில நாட்களே உள்ள நிலையில் ஒரு பரபரப்புக்காகவே இந்த முடிவுகள் இருக்கும் என்பதே உண்மை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT