Published : 28 Apr 2021 05:14 PM
Last Updated : 28 Apr 2021 05:14 PM
திருப்பூர் மாவட்டம் காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் ஏ.எஸ்.ராமலிங்கம். இவர் 13,483 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக பழையகோட்டை ஊராட்சியில் பதாகை வைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டவர் ஏ.எஸ்.ராமலிங்கம். இவர் வெற்றி பெற்றதாக, பழையகோட்டை அதிமுக சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில், ’காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கத்தை 13,483 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்த வாக்காளப் பெருமக்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் நன்றி, நன்றி. நன்றி’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினரைத் தொடர்புகொள்ள எனக் குறிப்பிடப்பட்டு, அதில் ஏ.எஸ்.ராமலிங்கத்தின் அலைபேசி எண்ணும் பதிவிடப்பட்டுள்ளது.
பழையகோட்டை ஊராட்சி மக்கள் சிலர் கூறுகையில், ''தேர்தல் பிரச்சாரத்தின் போது, பழையகோட்டை ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே இந்தப் பதாகை வைக்கப்பட்டது. இந்த நிலையில் கிராம மக்கள், தேர்தல் பிரிவு அலுவலர்களுக்குப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் வந்து பதாகையை அகற்ற வைத்தார். ஆனால், தற்போது வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே, வெற்றி பெற்றதாக பதாகை வைத்ததாகக் கூறி, அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது'' என்றனர்.
இது தொடர்பாக ஏ.எஸ்.ராமலிங்கம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறுகையில், "இந்த வேலையை யார் செய்தது என்று தெரியவில்லை. ஆர்வமிகுதியால் செய்தார்களா அல்லது என் பெயரைக் கெடுக்கும் நோக்கில் இதனைச் செய்தார்களா எனப் புரியவில்லை. அங்குள்ள கட்சிக்காரர்களிடம் விசாரித்தேன். அவர்களுக்கும் தெரியவில்லை . பதாகையில் அச்சகம் உள்ளிட்ட விவரங்கள் இல்லாததால், யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. தேர்தல் முடிவுக்கு முன்னரே வெற்றி பெற்றதைப் போல், வாழ்த்துகள் கூறி ஆராவாரத்தைப் பதாகைகளில் வெளிப்படுத்தி உள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது.
நமது கண்ணியத்தையும், மக்கள் நலன் சார்ந்த நல்லெண்ணத்தையும் மாசுபடுத்துவதாக உள்ளது. அதிமுக இயக்கத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக உள்ளது. அனைவரும் தேர்தல் முடிவுகள் வரும் வரையில், அமைதி காக்க வேண்டும். இதனை வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இது தொடர்பாக கட்சியின் மண்டலப் பொறுப்பாளருக்குத் தெரியப்படுத்தி உள்ளேன். அதேபோல், திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளிக்க இருக்கிறேன்" என்றார்.
காங்கயம் தேர்தல் நடத்தும் அலுவலர் ரெங்கராஜன் கூறுகையில், "இது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை. பதாகை விவகாரம் தொடர்பாக விசாரிக்கிறோம்" என்றார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT