Published : 28 Apr 2021 11:06 AM
Last Updated : 28 Apr 2021 11:06 AM
புதுச்சேரி மாநிலத் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டு உபரி ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமருக்குக் கடிதம் எழுத உள்ளதாக, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (ஏப். 27) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கரோனா தொற்றைக் கட்டுப்பத்துவதற்கு நாம் அதிகமான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும். அதற்கு மாநில நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து செயல்பட வேண்டும்.
ஆனால், முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புகளைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை கொடுக்கிறார். காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகள் திறந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சில கடைகளை மூட வேண்டும் எனக் கூறுகிறார்கள். தெளிவான முறையில் அரசின் அறிவிப்பு இருக்க வேண்டும்.
புதுச்சேரியில் உள்ள ஐநாக்ஸ் நிறுவனம் தினமும் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்கிறது. இதில், மாநில அரசுக்கே தெரியாமல் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நமக்கு தினமும் 25 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இது படிப்படியாக உயருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு புதுச்சேரி மாநிலத் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டு, அதன் பிறகு உபரியாக இருக்கின்ற ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்குக் கடிதம் எழுதவுள்ளேன்.
கரோனா தொற்றின் 2-வது அலை நம்முடைய நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாட்டில் தினமும் 3.5 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாறி மே மாதத்தில் தினமும் 5 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதனைத் தடுக்க தகுந்த கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மருத்துவ அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மேலும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்சமயம் 20 வென்டிலேட்டர்தான் வேலை செய்கிறது.
10 வென்டிலேட்டர்கள் பழுதாகியுள்ளன. 40க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் பயன்படுத்தாமல் அரசு மருத்துவக் கல்லூரியில் வைத்துள்ளார்கள். இது மிகப்பெரிய குற்றம். உடனடியாக அவற்றைப் பொருத்தி, கரோனா நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்கள் கிடைப்பதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
புதுச்சேரியில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு என்று கூறும்போது எந்தெந்தத் தளர்வு என்று மிகத் தெளிவாகக் கூற வேண்டும். மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. தினமும் ஒரு உத்தரவு என்று இருக்கக் கூடாது.
எல்லா உத்தரவுகளையும் ஒரே நாளில் போட்டால்தான் மக்கள் குழப்பம் இல்லாமல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியும். கரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் மட்டுமல்ல பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT