Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM
சேலத்தில் தேசிய நெடுஞ்சாலை களில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக 24 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க கூட்டு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கத்திரி வெயிலுக்கு முன்னதாகவே கோடை வெயில் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அதிகபட்சமாக 108.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால், பகல் நேரங்களில் அனல் காற்று வீசத்தொடங்கியுள்ளது. மேலும், மாவட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்பட்டதால், கோடையில் அனல் காற்று வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க கூட்டு இயக்க மாநிலத் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
சேலம்-உளுந்தூர் பேட்டை நான்கு வழிச் சாலைப் பணிக்காக சேலம் மாவட்டத்தில் 4 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டன. இதில், அரசு மற்றும் விவசாய நிலங்களில் இருந்த மரங்கள் அடக்கம். அதேபோல, சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு லட்சம் மரங்களும், சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலைக்காக ஒரு லட்சம் மரங்கள் என மாவட்டம் முழுவதும் 6 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
ஒரு மரம் வெட்டப்பட்டால், அதற்கு மாற்றாக 4 மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளர்க்க வேண்டும் என்பது அரசு விதி. சேலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக 24 லட்சம் மரக்கன்றுகள் வைத்திருக்க வேண்டும். ஆனால், பெயரளவில் சில ஆயிரம் மரக்கன்றுகளை அதிகாரிகள் நட்டு விட்டு, அதனை சரியாக பராமரிக்காததால் நட்ட மரக்கன்றுகளும் செத்து மடிந்து மாயமாகிவிட்டது. இதனால், அனல் நகரமாக சேலம் மாறியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் சாலையோரங்களில் ஆல மரம், புங்கன், வேம்பு, அரச மரம், இச்சிலி மரம், புளிய மரம் என எண்ணற்ற மரங்கள் பறவைகளின் வாழ்விடமாகவும், ஆக்சிஜன் உற்பத்தி கேந்திரமாகவும் விளங்கியது. மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டதால் பறவைகள் இடம்பெயர்ந்து, ஆக்சிஜன் பற்றாகுறையால் காற்றில் அனலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
எனவே, 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் சாலை பணிக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக 24 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT