Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM

இடிந்து விழும் நிலையில் புளியங்குடி தபால் நிலையம்: ஊழியர்கள், பொதுமக்கள் அச்சம்

புளியங்குடியில் தபால் நிலையம் செயல்படும் பழுதடைந்த கட்டிடம்.

தென்காசி

புளியங்குடியில் உள்ள தபால் நிலையம் இடிந்து விழும் நிலையில்உள்ளதால் ஊழியர்கள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆபத்து ஏற்படும் முன் உடனடியாக இடமாற்றம் செய்து, தபால்நிலையத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் நகரின் மையப் பகுதியான டி.என்.புதுக்குடியில் வாடகை கட்டிடத்தில் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 15 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

புளியங்குடி பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளில்இருந்தும் பல்வேறு சேவைகளுக்காக தினமும் ஏராளமான மக்கள் புளியங்குடி தபால் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

இந்த கட்டிடம் மிகவும் பழமையானது. பல இடங்களில் கான்கிரீட்மேற்கூரை உதிர்ந்து விழுந்துள்ளன. சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் தண்ணீர்கசிகிறது.

இடிந்து விழும் நிலையில் கட்டிடம் இருப்பதால் ஊழியர்கள், தபால் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் உயிருக்கு பாது காப்பற்ற நிலை உள்ளது. எனவே, தபால் நிலையத்தை வேறுகட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, “புளியங்குடியில் தபால் நிலையத்துக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவில் இடம் வாங்கப்பட்டு உள்ளது. ஆனால் என்ன காரணத்தினாலோ 25 ஆண்டுகளுக்கு மேலாக அந்தஇடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. இதனால் அந்த இடம் முட்புதர்கள் முளைத்து காணப்படுகிறது.

சொந்தமாக இடம் இருந்தும் அதில் கட்டிடம் கட்டப்படாததால் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் தபால் நிலையம் இயங்கி வருகிறது.

இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை தபால் துறைக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டவோ, தபால்அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேற்கூரையில் பல இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்துள்ளது. சுவர்கள் அனைத்தும் விரிசல் விழுந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களும், ஊழியர்களும் அச்சத்துடனேயே தபால் நிலையத்துக்கு செல்கின்றனர்.

கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் என்ற நிலை உள்ளதால் கட்டிடத்தை காலி செய்து தரும்படி உரிமையாளர் கூறியும் கண்டுகொள்ளவில்லை. வேறு ஒரு கட்டிடத்தில் ஏற்பாடுசெய்து தருவதாகக் கூறியதையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான இந்த கட்டிடத்துககு வருபவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் தபால் துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் திருச்சபை நிர்வாகம் சார்பில் தபால் நிலைய நுழை வாயில் அருகே அறிவிப்பு ஒட்டியுள்ளனர்.

விபரீதம் ஏற்படும் முன் உடனடியாக தபால் நிலையத்தை பாதுகாப்பான கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும். மேலும், தபால் நிலையத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணியையும் உடனடியாக தொடங்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x