Published : 27 Apr 2021 06:43 PM
Last Updated : 27 Apr 2021 06:43 PM

சம்பிரதாய பதில் இல்லை; நல்லது நடந்தால் சரி: மத்திய சுகாதார துறையின் உடனடி அழைப்பு குறித்து மதுரை எம்.பி கருத்து

தனது கடிதத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உடனடியாக பதிலளித்திருக்கும் நிலையில், அதன் நீட்சியாக நல்லது நடந்தால் சரி என்று மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எம்.பி. சு.வெங்கடேசன் கூறியிருப்பதாவது:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து செவ்வாயன்று தொலைபேசி அழைப்பு வந்தது. அமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளர் மதன் மோகன் தாஸ் பேசினார். “கடந்த 23 ஆம் தேதி நீங்கள் அமைச்சருக்கு எழுதிய கடிதம் குறித்து உரிய முடிவெடுத்து உங்களுக்குத் தெரிவிக்கிறோம்” என்றார்.

வழக்கமாக எழுதப்படும் கடிதத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்ற சம்பிரதாயமான பதிலோ, அல்லது விளக்கத்துடனான பதிலோ வரும்.

ஆனால் கடிதம் கண்டவுடன் முடிவெடுத்து உங்களுக்குச் சொல்கிறோம் என்று தொலைபேசியில் அழைத்து சொல்வது. இது வரை இல்லாத ஒன்றாக உள்ளது.

நல்லது நடந்தால் சரித்தான். நல்லதையே எதிர்பார்ப்போம்.

23 ஆம் தேதி அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்:

* புதிய விலைக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். தடுப்பூசிக்கு சந்தையைத் திறந்து விடுவது கூடாது.

* தடுப்பூசி அளிப்பிற்காக, செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ, நீலகிரி பாஸ்டியர் ஆய்வகம், சென்னையின் பி.சி.ஜி ஆய்வகம், சிம்லாவின் மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் போன்ற அரசு மருத்துவ நிறுவனங்கள் மூலம் உற்பத்தி அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* ஏற்றுமதி முறையாக நெறிப்படுத்தப்பட்டு உள்நாட்டுத் தேவை சற்றும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* "கட்டாய உரிமம்" வழங்கப்படுவதை உறுதி செய்து எல்லோருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

* அமெரிக்க ஐக்கிய நாடுகள், மருத்துவ துணைப் பொருட்கள் மீது விதித்துள்ள தடையை நீக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.

* மத்திய அரசே தடுப்பூசிக்கான முழு செலவை ஏற்பதோடு எல்லோருக்கும் கட்டணமில்லா தடுப்பூசியை உறுதி செய்ய வேண்டும்.

"ஊரடங்கு" என்பது தீர்வுகளுக்கான கடைசி தெரிவாக இருக்க வேண்டுமென்று நமது பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். எனது வேண்டுகோள் இதுதான். தடுப்பூசி என்பது தீர்வுக்கான முதல் தெரிவு. அதற்கான கவனத்தை அரசாங்கம் செலுத்த வேண்டாமா?

மத்திய அரசு இதற்கான நேர்மறை நடவடிக்கைகளை மேற் கொள்ளுமா? காலத்தே செய்யுமா?

மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x