Published : 27 Apr 2021 06:24 PM
Last Updated : 27 Apr 2021 06:24 PM
ஆக்சிஜனைப் பங்கிடும் பொறுப்பை மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் வழங்கியிருப்பதால், பிரதமர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனைத் தமிழகத்தின் முழுத் தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி, ஆக்சிஜனை தமிழகத்துக்கு அளிப்பதில் முன்னுரிமை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசுக்கே ஆக்சிஜனை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் இதில் தமிழக நலனைப் புறக்கணிக்காமல், தமிழகத்தின் முழுத் தேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:.
“கரோனா பரவல் கடுமையாக உள்ள நிலையில், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை உருவாக்குவதில் காலதாமதம் ஏற்படும் என்கிற மருத்துவத் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தை கவனத்தில் கொண்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாத காலத்திற்கான தற்காலிக அனுமதி வழங்கிட நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டது திமுக.
அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் வேறு எந்தெந்த வகையில் விரைவாக ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்ற அடிப்படையில் திருச்சி பெல் நிறுவனத்தில் முடங்கியுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை விரைந்து மறு உருவாக்கம் செய்ய வேண்டும் எனத் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி. மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் உயிர் காக்க எந்தெந்த வகையில், தமிழ்நாட்டின் மருத்துவத் தேவைக்கான ஆக்சிஜனை விரைந்து பெற முடியுமோ அதற்கான முயற்சிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது திமுக. அதனடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையிலும் ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தியது.
தமிழக அரசு மற்றும் குழுவினரின் முழுக் கண்காணிப்பில் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், ஸ்டெர்லைட்டில் வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜனைத் தயாரித்து, அது மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் மத்திய அரசு மாநிலங்களின் தேவைக்கேற்ப ஆக்சிஜனைப் பிரித்து வழங்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக அனைத்துக் கட்சிகள் முன்வைத்த நிபந்தனையின் அடிப்படையிலான அரசின் தீர்மானத்தை உச்ச நீதிமன்றத்தில் உரிய முறையில் எடுத்துரைக்க, தமிழக காபந்து அரசு தவறிவிட்டதன் விளைவு இது. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவை இனி வரும் நாட்களில் அதிகரிக்கும். எனவே, தமிழகத்தின் முழுத் தேவையை நிறைவேற்றிய பிறகு, மீதமுள்ள ஆக்சிஜனைப் பிற மாநிலங்களுக்கு அளித்திடுவதே சரியான வழிமுறையாகும்.
ஆக்சிஜனைப் பங்கிடும் பொறுப்பை மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் வழங்கியிருப்பதால், பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இதில் கவனம் செலுத்தி, ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனைத் தமிழகத்தின் முழுத் தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் உடனடியாக தமிழக காபந்து அரசின் அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். பேரிடர் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு எவ்வகையிலும் அநீதி இழைத்திடக் கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT