Published : 27 Apr 2021 05:19 PM
Last Updated : 27 Apr 2021 05:19 PM

திமுக ஆட்சி அமைந்ததும் ஆக்சிஜன் உற்பத்திக்குப் பின் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்: ஸ்டாலின் உறுதி

சென்னை

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை. திமுக அரசு அமைந்ததும், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக சீல் வைக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேதாந்தா ஆலையை இயக்கவே ஆக்சிஜன் தேவைக்காக திறப்பதுபோல் கூறுகிறார்கள். இதன் மூலம் மீண்டும் ஆலையை இயங்க வைக்கவே இந்த ஏற்பாடு என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல், சீமான், 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தரராஜன் உள்ளிட்டோர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்து அமையும் திமுக ஆட்சியில் தவணைக் காலம் முடிந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை பூட்டி சீலிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழக காபந்து அரசின் சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக, கரோனா இரண்டாவது அலை பரவலின் வேகமும் அது ஏற்படுத்தும் விபரீதத் தாக்கமும் பொதுமக்களைக் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ள நிலையில், மருத்துவ ஆக்சிஜனின் தேவையை உணர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.

வேறு எந்த நோக்கத்திலும் ஆலை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்பதும், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டின் தேவைக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, அதன்பிறகே பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்பட்டது.

ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செயல்பாட்டைத் தவிர வேறு எந்தப் பணியும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதையும் உறுதி செய்ய தமிழக அரசு நிர்வாகத்துடன் தூத்துக்குடி பொதுமக்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், போராட்ட அமைப்பினர் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் என்பதையும் திமுக வலியுறுத்தியது. இவற்றைத் தமிழக காபந்து அரசு ஏற்றுக்கொண்டது.

ஸ்டெர்லைட் ஆலை தற்காலிக அனுமதியுடன், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வேறு எவ்வகையான செயல்பாட்டுக்காகவும் அல்ல. திமுக அரசு அமைந்ததும், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக சீல் வைக்கப்படும் என்ற உறுதியினை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x