Published : 27 Apr 2021 04:45 PM
Last Updated : 27 Apr 2021 04:45 PM
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராக உள்ளது. தமிழக அரசு தன் தரப்பை முறையாக நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
விழுப்புரத்தில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’மத்திய அரசு ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து வாதிட்டு வருகிற்து. 50 ஆயிரம் மெட்ரிக் டன் உள்ளது; 7 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் உள்ளது என வாதிடும் மத்திய அரசு, ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஆக்சிஜன் தயாரிக்கத் திறக்கலாம் என்று சொல்வதை விளக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராக உள்ளது. தமிழக அரசு தன் தரப்பை முறையாக நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை. தமிழகத்திற்கு 450 மெட்ரிக் டன் தேவை என்றும், 400 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், 50 மெட்ரிக் டன் பற்றாக்குறை என்பதை மத்திய அரசுக்குத் தெரிவித்த தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஏன் அதைத் தெரிவிக்கவில்லை?
ஸ்டெர்லைட் வளாகத்தில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்தியத் தொகுப்புக்கு அனுப்பப்படும் என்றும், தமிழகத்திற்குத் தற்போது தேவைப்படவில்லை என்றும் மத்திய அரசு சொல்கிறது. தமிழக அரசு தங்களுக்குத் தேவை உள்ளது என்று ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, அதில் விசிக, மதிமுக கட்சிகளைத் திட்டமிட்டுத் தவிர்த்துவிட்டது.
மத்திய அரசின் முடிவுக்குத் திமுகவை உடன்பட வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இக்கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்புக் குழு என்பது மத்திய அரசின் விருப்பத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான என்எல்சி, பெல் நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள வேதாந்தா குழுமத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முனைப்பு காட்டாமல், தமிழகத்தில் மூடப்பட்டுள்ள நிறுவனத்தில் உற்பத்தி செய்ய எடுக்கப்பட்ட முடிவு முரண்பட்டது. இருந்தாலும், கரோனா அலை தாக்கத்தால் மக்களுக்காக விசிக இதற்கு சம்மதித்திருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை உயிரிழப்பைவிட, இதனை மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்வது பெரிய இடர்ப்பாடாக இருக்கும் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். அந்தந்த மாநிலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முயற்சி எடுக்க வேண்டும்.
தற்போது தமிழகத்துக்குத் தேவைப்படும் 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கேரளாவில் இருந்து கொண்டுவரப்படுகிறது. வருங்காலத்தில் கேரளாவிற்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால் தமிழகத்தின் தேவை எப்படிப் பூர்த்தியாகும்? தமிழகத்திற்குத் தேவையான ஆக்சிஜனை மாநில அரசு உற்பத்தி செய்ய முயற்சி எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனைத் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவேண்டும்''.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT