Published : 27 Apr 2021 03:07 PM
Last Updated : 27 Apr 2021 03:07 PM

குறுக்கு வழியில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசு வழிசெய்து விட்டது: வைகோ

வைகோ: கோப்புப்படம்

சென்னை

குறுக்கு வழியில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு வழிசெய்து விட்டது என, வைகோ விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று (ஏப். 27) வெளியிட்ட அறிக்கை:

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, 1996இல் இருந்து போராடி வருகின்றேன். தொடர்ந்து உண்ணாவிரதங்கள், நடை பயணங்கள், மறியல், முற்றுகை என மதிமுக போராட்டங்கள் நடத்திய அளவுக்கு, தமிழ்நாட்டில் வேறு யாரும் நடத்தியது கிடையாது.

பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 1997இல் ரிட் மனு தாக்கல் செய்தேன். அதில், நானே வாதாடினேன். 2010 செப்டெம்பர் 28ஆம் தேதியன்று, ஆலையை மூடுமாறு தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தடை ஆணை பெற்றது. 2013 ஏப்ரல் 2ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. அதன்பிறகு, நான் தீர்ப்பாயத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்தேன். மீண்டும் இன்னொரு ரிட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.

அந்த ரிட் மனு, இன்னும் நிலுவையில் இருக்கின்றது. இதற்கிடையில் நடைபெற்ற போராட்டத்தில்தான் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாடு அரசு, முழுக்க முழுக்க ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஏஜெண்டாகவே வேலை செய்து வந்துள்ளது. தற்போது, நாட்டில் ஆக்சிஜன் தேவை என்ற பெயரில், ஸ்டெர்லைட்டை இயக்குவதற்கு வேதாந்தா நிறுவனம் முயல்கின்றது.

தமிழ்நாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை மட்டும்தான் ஆக்க வேண்டும்; அதைப் பகிர்ந்து வழங்குகின்ற அதிகாரமும் தமிழ்நாட்டுக்குத்தான் வேண்டும் என, நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இன்று உச்ச நீதிமன்றத்தில், ஆக்சிஜன் ஆக்கும் முழு உரிமையும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டுவிட்டது.

தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை, அழுத்தமாக உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்ய தமிழக அரசு வேண்டும் என்றே தவறிவிட்டது. மறைமுகமாக, குறுக்கு வழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழிசெய்து விட்டது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x