Published : 27 Apr 2021 01:50 PM
Last Updated : 27 Apr 2021 01:50 PM

பெல் நிறுவனம், எண்ணூர் ஆலை ஆக்சிஜன் தயாரிப்பு குறித்து ஏன் யாரும் உச்ச நீதிமன்றம் செல்லவில்லை?- 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தரராஜன் கேள்வி

சென்னை

திருச்சி பெல் நிறுவனம், எண்ணூர் தெர்மல் பிளான்ட் உள்ளிட்ட பல்வேறு ஆலைகள் ஆக்சிஜன் தயாரிக்கக் கோரி வழக்குப் போடாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவு எதுவும் ஏற்கப்படாததும் சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது என 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்துள்ளது. அதே நேரம் தமிழக அரசின் அனைத்துக் கட்சித் தீர்மானத்தில் அளித்த நிபந்தனைகளை ஏற்காமல் மத்திய அரசு 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்கலாம், தயாரிக்கும் ஆக்சிஜனை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தரராஜன் கூறியதாவது:

“தீர்ப்பு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. தமிழக அரசு ஒருபோதும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க வேதாந்தாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. அப்படி இயக்குவதாக இருந்தால் அரசே ஏற்று நடத்த வேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அரசுடைமை ஆக்கி, நம்மிடம் உள்ள பெல், சேலம் உள்ளிட்ட ஆலைகளில் உள்ள பொறியாளர்கள், நிபுணர்களை வைத்து இயக்கலாம் என்று சொன்னோம்.

ஆனால் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தமிழக அரசு, ஆலையை அவர்களே இயக்கலாம். நிபுணர் குழுவை அமைக்கும் அரசு என்று கூறியது. தமிழகத்தின் தேவை போக மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அளிக்கும் என்று தீர்மானம் போட்டார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் எதையுமே ஏற்கவில்லை.

ஆக்சிஜனைத் தயாரித்து மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டும், மத்திய அரசே நிபுணர் குழுவை அமைக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது மக்கள் நலன் சார்ந்த தீர்ப்பல்ல. வேதாந்தா நிறுவனம் சார்ந்த தீர்ப்பு. இதுவரை அரசின் வேறு எந்த ஆலைக்கும் ஆக்சிஜன் உற்பத்திக்காக வழக்கு எதுவும் உச்ச நீதிமன்றம் செல்லவில்லை.

திருச்சி பெல் ஆலை மூடிக் கிடக்கிறது. அங்கு ஆக்சிஜன் உற்பத்தி நடக்கவில்லை, சென்னையில் எண்ணூர் தெர்மோ பிளான்ட்டில் ஆக்சிஜன் ஆலை உள்ளது. அதைத் திறக்கச் சொல்லி யாரும் நீதிமன்றம் செல்லவில்லை. பல இடங்களில் ஆக்சிஜன் உற்பத்திக்கான ஆலைகள் இருக்கும்போது வேதாந்தா நிறுவனத்துக்காக மட்டும் சென்று தீர்ப்பை வாங்கியுள்ளது நிச்சயமாக மக்களுக்கு விரோதமானது. மாநில அரசுக்கு விரோதமானது.

உடனடியாகத் தமிழக அரசு, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை அரசுடைமையாக்க வேண்டும். நமது பொறியாளர்களை வைத்து ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்கவும், அங்குள்ள காப்பர் பிளான்ட்டைச் செயலிழக்கவும் செய்ய வேண்டும். பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும்”.

இவ்வாறு 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x