Published : 27 Apr 2021 01:43 PM
Last Updated : 27 Apr 2021 01:43 PM
வாக்கு எண்ணும் மையத்துக்கு வருவோர் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும், நோய்த் தொற்று உறுதியானவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைய முடியாது என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 தொகுதிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது.
வாக்கு எண்ணும் பணியில் 204 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மத்திய பாதுகாப்புப் படையினர், காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லக்கூடிய வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் ஊடகத் துறையினர் என அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மார்க்கெட் பகுதியில் இருந்து மொத்த வியாபாரிகள் திருப்பத்தூர் மாவட்டத்துக்குள் அதிகமாக வந்து செல்கின்றனர். இதன் மூலம் நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருவதாகத் தெரிகிறது.
இதைத் தடுக்க மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடி அமைத்து கிருஷ்ணகிரியில் இருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மாவட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்கவும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை அதிகரிக்க சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 5.52 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது.
தேவைப்பட்டால் தனியாரிடம் இருந்து ஆக்சிஜன் பெறவும் ஏற்பாடுகள் செய்துள்ளோம். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மட்டும் 600 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாட்றாம்பள்ளியில் உள்ள கரோனா சிறப்பு சித்த மருத்துவமனையில் 150 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர மாவட்டத்தில் உள்ள பிற அரசு மருத்துவமனைகள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள், ஆம்பூர், கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி, இஸ்லாமியா கல்லூரி ஆகியவற்றிலும் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டு அங்கு கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அவசியம் இல்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் கூடுமானவரை வெளியே வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கரோனாவை ஒழிக்க தடுப்பூசி அவசியம் என்பதால் தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். முதல் டோஸ் போட்டவர்கள் 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி வாணியம்பாடி ஜெயின் கல்லூரியில் எண்ணப்படுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதன் பிறகு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல, வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் மற்றும் ஊடகத் துறையினர் என அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் பாதுகாப்பு கருதி கரோனா பரிசோதனை செய்து அதற்கான ரிசல்ட் பெற்றிருக்க வேண்டும்.
இதற்காக வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் அந்தந்த தாலுக்கா அளவில் நடத்தப்பட உள்ளது. எனவே, ஒவ்வொரு தொகுதியைச் சேர்ந்த வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் செய்தியாளர்கள் அந்தந்தத் தொகுதியில் நடத்தப்படும் சிறப்பு கரோனா பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நோய்த்தொற்று உறுதியானால் அவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்படும்’’.
இவ்வாறு ஆட்சியர் சிவன் அருள் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT