Published : 27 Apr 2021 01:12 PM
Last Updated : 27 Apr 2021 01:12 PM
தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் 12 ஆயிரத்து 370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக, பொதுப்பணித்துறை இன்று (ஏப். 27) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"கோவிட் - 19 கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அலை வந்தபோது, தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுக்கா அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 138 மருத்துவமனைகளில் ரூ.282.51 கோடி மதிப்பில் 27 ஆயிரத்து 806 படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தும் வார்டுகள் மற்றும் இதர சுகாதார வசதிகள் ஏற்படுத்தும் பணிகள், பொதுப்பணித்துறையால் அவசரகாலப் பணியாக மேற்கொள்ளப்பட்டது. இதில் 21 ஆயிரத்து 692 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதுபோலவே, இவ்வாண்டு கரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ளவும், பொதுமக்களுக்குத் தரமான மருத்துவ சிகிச்சை வழங்கிடவும், அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதலாக 12 ஆயிரத்து 370 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்க அரசு அறிவுறுத்தலின் பேரில், பொதுப்பணித் துறையால் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு 2,912 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள் செய்யப்பட்டன. இத்துடன் கூடுதலாக இவ்வாண்டு 2,895 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை கூடுதல் ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 550, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500, அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எழும்பூரில் 225, கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் கிண்டியில் 200 மற்றும் சென்னையில் உள்ள இதர சுற்றுவட்டார 11 மருத்துவமனைகளில் 1,420 கூடுதல் ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக 434 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், திருச்சி மாவட்டத்தில் 585, தஞ்சாவூர் மாவட்டத்தில் 583, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 311, மதுரை மாவட்டத்தில் 225 மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் 325 மற்றும் பிற மாவட்டங்களில் கூடுதலாக 7,012 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவத் துறையைச் சார்ந்த மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் ஆகியோர் நாள்தோறும் கலந்து ஆலோசித்து இரண்டாம் அலையை எதிர்கொள்ள மருத்துவத் துறைக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பொதுப்பணித்துறை தீவிரமாகவும் துரிதமாகவும் செய்து வருகிறது".
இவ்வாறு பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT