Published : 27 Apr 2021 01:05 PM
Last Updated : 27 Apr 2021 01:05 PM
ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்ததுடன், மேற்பார்வைக் குழு ஒன்றையும் அமைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்படும் நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி மடியும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஆக்சிஜன் மட்டும் தயாரித்து அளிக்கிறோம் என வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
ஆனால், ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களும், தமிழக அரசும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதை எதிர்த்தன. பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன. இந்நிலையில் அரசே ஆலையை ஏற்று நடத்தலாமே என உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்தது.
இதுகுறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக அரசு தெரிவித்த நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு நேற்று கூட்டியது. இந்தக் கூட்டத்தில் 8 கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தன.
ஆக்சிஜன் தயாரிப்புக்கு மட்டுமே அனுமதி, மின்சாரத்தைத் தமிழக அரசு மட்டுமே வழங்க வேண்டும், இதை வைத்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடவடிக்கை, எதிலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் செயல்பட அனுமதி வழங்கக் கூடாது, 4 மாதத்திற்கு மட்டுமே தற்காலிக அனுமதி, ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்து தமிழகப் பயன்பாட்டுக்குப் போக வெளி மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகள் தரப்பில் ஒருமித்த கருத்தாக வெளிப்பட்டது.
அனைத்துக் கட்சிகளின் கருத்தை அரசு ஏற்கும் எனத் தெரிவித்த முதல்வர் பழனிசாமி, ஆக்சிஜன் உற்பத்திக்காக 4 மாதங்களுக்கு மட்டுமே அனுமதிக்கலாம், ஆக்சிஜன் உற்பத்தியை உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்துக் கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும், ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம். ஆனால், அரசின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இயங்க வேண்டும். தற்காலிகமாக 4 மாதங்களுக்கு ஆக்சிஜன் தேவைக்கு மட்டுமே ஆலை திறக்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் வாதங்களைக் கேட்டபின், ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு அனுமதி அளித்தது. 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. நிபுணர் குழுவுடன் சேர்த்து மேற்பார்வைக் குழு ஒன்றையும் அமைக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT