Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM
மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் வாவிபாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் மேற்கொள்ளப்படும் கழிப்பறை பராமரிப்பு பணியால், கடந்த 15 நாட்களாக கழிப்பிட வசதியின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 18-வது வார்டுக்கு உட்பட்டது வாவிபாளையம் ஆதிதிராவிடர் காலனி. இப்பகுதியில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, ஊராட்சியாக நெருப்பெரிச்சல் பகுதி இருந்தபோது 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டணமில்லா கழிப்பிடங்கள் கட்டப்பட்டன. மேற்கண்ட பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு, மின் கட்டணம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மற்றும் நீர் விநியோகத்தை மட்டும் மாநகராட்சி செய்து வந்தது. இந்நிலையில், பொதுமக்களுக்கு எந்தவித அறிவிப்பும் அளிக்காமல், இலவச கழிப்பறை வசதி மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கடந்த 15 நாட்களாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறோம். 80 குடும்பங்களில் 70 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. நாள்தோறும் வேலைக்குச் சென்றால் மட்டுமே, பிழைக்கக்கூடிய சூழலில் பல குடும்பங்கள் உள்ளன. பள்ளி விடுமுறை என்பதால், குழந்தைகளும் வீட்டில் உள்ளனர். இயற்கை உபாதைக்கு செல்ல பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அப்பகுதியை பயன்படுத்தும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளும் இந்த கழிப்பிடத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது எங்கு செல்வதென்றே தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எந்தவித மாற்று ஏற்பாடுகளின்றி, கரோனா பெருந்தொற்று நேரத்தில் இப்படி செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இயற்கை உபாதைக்கு அருகில் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக நடமாடும் தற்காலிக கழிவறைகளை அமைத்துவிட்டு, இந்த பணிகளை செய்திருக்கலாம். அனைவருக்கும் கழிவறை எனும் வசதியை, மாநகராட்சியில் வசிக்கும் எங்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்’’ என்றனர்.
இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு ஒன்றியக் குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஏ.சிகாமணி தலைமையில், மாநகராட்சி 2-வது மண்டல உதவி ஆணையர் செல்வநாயகத்திடம் அளிக்கப்பட்ட மனுவில், ‘‘மாநகராட்சியின் பராமரிப்பில் இருந்த அந்த பொதுக் கழிப்பிடம், கடந்த 15 நாட்களுக்கு முன்பு பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டது. இன்றுவரை திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஏழை மக்கள் கழிப்பிட வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். போர்க்கால அடிப்படையில், உடனடியாக கழிப்பிட பராமரிப்பு பணியை முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் செல்வநாயகம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘திருப்பூர் மாநகரில் தற்காலிக (மொபைல் டாய்லெட்) கழிவறை வசதி இல்லை. வாவிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் நடைபெற்றுவரும் கழிவறை பராமரிப்பு பணிகள், ஒரு வாரத்துக்குள் முடிக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT