Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM

அணைகளின் நீர்மட்டம் சரிவால் நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்தி பணியில் சிக்கல்

மஞ்சூர்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் சரிந்துள்ளதால், மின் உற்பத்தி பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மாயாறு மற்றும் பவானி ஆகிய இரு ஆறுகள் உற்பத்தியாகின்றன. இரு ஆறுகளும், பவானிசாகர் அணையை அடைந்து, அங்கிருந்து பவானியாக பயணிக்கிறது. பவானி பாசனப் பகுதிகளின் தண்ணீர் தேவையை பவானி ஆறு பூர்த்திசெய்து, டெல்டா மாவட்டங்கள் வரை விரிவடைகிறது. கோடை காலங்களில் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க பெரும் உதவி புரிவது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள புனல் நீர்மின் நிலையங்கள்தான்.

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலம் 833.77 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் பெரிய அணையாக கருதப்படும் அப்பர் பவானி அணையில் சேகரிக்கப்படும் தண்ணீர் ராட்சத குழாய் மூலம், அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி மற்றும் பில்லூர் மின் நிலையம் வரை கொண்டு செல்லப்பட்டு, மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அப்பர் பவானி அணை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் அப்பர் பவானி அணையில் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. மொத்த கொள்ளளவான 210 அடியில் தற்போது 90 அடி நீர் இருப்பு மட்டுமே உள்ளது. கோடை காலத்தில் வெப்பம் காரணமாக மின் தேவை அதிகரித்துள்ளது. மின் உற்பத்திக்காக அணைகள் திறக்கப்பட்டதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாமல் அணைகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கோடை காலத்தில் மின் உற்பத்திக்கு சிக்கல் எழுந்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘மின் உற்பத்திக்கான அணைகளில் 40 சதவீதம் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. கோடையை கருத்தில்கொண்டு, குந்தா, கெத்தை, மாயாறு உள்ளிட்ட அணைகளில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தினசரி, 400 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x