Published : 09 Dec 2015 11:34 AM
Last Updated : 09 Dec 2015 11:34 AM

இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் மதுரையில் வெள்ளரி சாகுபடி: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதால் வரவேற்பு

குளிர்பிரதேசங்களைப் போல் வறட்சி மற்றும் நிலையில்லாத தட்பவெப்ப நிலையால் பழமையான விவசாய சாகுபடியில் ஈடுபட்டுவந்த பாரம்பரியமிக்க மதுரை விவசாயிகளும் தற்போது இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் வெள்ளரி சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் ஓசூர், கோவை, திருப்பூர், நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிர்பிரதேசங்களில் நிலையில்லா தட்பவெப்பநிலை, காய்கறிகள் தேவை அதிகரிப்பு, தண்ணீர் தட்டுப்பாடு, நோய் பரவு தலைத் தடுப்பதற்கு விவசாயிகள் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் (பசுமைக் குடில்) காய்கறிகள், மலர் சாகுபடியை மேற்கொள்கின்றனர். மதுரை மாவட்டத்தில் பெரும் பாலான பகுதிகள் களிமண் மற்றும் குருமணல் கலந்த நிலப் பகுதிகளாக உள்ளன. தமிழகத்தில் வெப்பநாட்கள் அதிகமுள்ள மாவட் டங்களில் மதுரையும் ஒன்று. இந்த மாவட்டத்தில் வைகை ஆறு, அதன் கிளை நதிகள் மற்றும் பெரியாறு பாசனக் கால்வாய்களை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. மழைக் காலம் தவிர மற்ற காலங்களில் இந்த நீர் நிலைகள் வறண்டு விடுவதாலும், நிலையில்லாத தட்ப வெப்பநிலையாலும் பழமையான விவசாய சாகுபடியில் ஈடுபட்டுவந்த பாரம்பரிய மதுரை விவசாயிகளும் தற்போது இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் காய்கறி சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர்.

மதுரை அருகே மலையாளத்தான்பட்டியில் விவசாயி ராம்குமார் என்பவர் இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் 1/4 ஏக்கரில் பசுமைக் குடில் அமைத்து, சாகுபடி செய்த வெள்ளரிச் செடிகளில் தற்போது அறுவடை செய்யத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘‘வெள்ளரியின் ஆயுட்காலம் 140 நாட்கள் மட்டுமே. 42-வது நாளில் செடிகளில் வெள்ளரி அறுவடை செய்யத் தொடங்கிவிடலாம். ஸ்டார் ஹோட்டல்களில் பல்வகை உணவுப் பொருட்கள் தயாரிக்க ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகளுக்கு இந்த வெள்ளரிகள் ஏற்றுமதியாகின்றன. 1/4 ஏக்கரில் ஒரு நாளைக்கு தற்போது 200 கிலோ வெள்ளரிக்காய்களைப் பறிக்கலாம். நாட்கள் செல்லச் செல்ல அதிகபட்சம் ஒருநாளைக்கு 800 கிலோ வரை பறிக்கலாம். 3 மாத அறுவடையில் மொத்தம் 20 டன் கிடைக்கும். பசுமைக்குடில் இல்லாத சாதாரண முறையில் சாகுபடி செய்தால் 6 ஏக்கரிலேயே வெறும் 8 டன் வெள்ளரிதான் கிடைக்கும்.

கோடைகாலம்தான் வெள்ளரிக்கு சீசன். அப்போது அதிகபட்சம் கிலோ ரூ.50-க்கு விற்கிறது. தற்போது சீசன் இல்லாவிட்டாலும் ரூ.35 முதல் ரூ.40 வரை விலை கிடைக்கிறது. இந்த விலைக்கு விற்றாலே நல்ல வருமானம் கிடைக்கும்.

உரச்செலவு, கூலித் தொழிலாளர்கள் ஊதியம் என தினமும் ரூ.2,800 வரை செலவாகிறது. 1/4 ஏக்கரில் பசுமைக் குடில் அமைத்து சொட்டு நீர் பாசனம் போட ரூ.20 லட்சம் செலவாகியுள்ளது. பசுமைக் குடில் ‘செட்’களை நிரந்தரமாகப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒருமுறையும் பசுமைக் குடில் மேற்கூரையை மட்டும் மாற்ற வேண்டும். அதற்கு ரூ.2 லட்சம் செலவாகும். ஆனால், வருமானமும், மகசூலும் இரட்டிப்பு மடங்கு கிடைக்கும். இந்த முறையில் சாகுபடி செய்ய நிறைய பொருளாதார முதலீடு தேவை. இந்த முறையில் வருமானம் கிடைத்தாலும், ஒரு நோயாளியை ஐ.சி.யூ.வில் வைத்து பராமரிப்பதுபோல் இந்தச் செடிகளை பராமரித்தால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும்.’’

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1/4 ஏக்கரில் 20 டன் மகசூல்

இதுபற்றி ராம்குமார் மேலும் கூறியது:

‘‘பொதுவாக திறந்தவெளியில் வெள்ளரி சாகுபடி செய்தால் செடிகள் கீழே தரையில்தான் படரும். அதனால் 1,700 செடிகளை நடுவதற்கே 6 ஏக்கர் நிலம் தேவைப்படும். இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் வெள்ளரி செடிகளை மேல்நோக்கி படர விடப்படுவதால் 1/4 ஏக்கரிலேயே 1,700 செடிகளை நட்டுவிடலாம். இந்த செடிக்கு ஒரு டிரிபெக் வீதம் டிரிப்பர்கள் வழியாக தண்ணீர், உரங்களை செலுத்தி செடிகளுடைய வேர்களுக்கு நேரடியாக செலுத்தலாம். காலை, மதியம், மாலையில் தலா 10 நிமிடம் வீதம் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும் தண்ணீர் விட்டால் போதும். அதனால், தண்ணீர், உரம் வீணாவது தடுக்கப்படுகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x