Published : 26 Apr 2021 06:50 PM
Last Updated : 26 Apr 2021 06:50 PM
தொற்று உள்ளதா என சோதனை செய்யாமல் அரசு மருத்துவமனைகளில் மக்கள் குவிவதால் பதற்றம் நிலவுகிறது. வென்டிலேட்டர், ரெம்டெசிவிர் ஆகியவை யாருக்குத் தேவைப்படுகிறது என்பது குறித்து மக்களுக்குப் பத்திரிகை, ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் கரோனா சிகிச்சைக்கான மருந்துகள், ஆக்சிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசி, மருத்துவமனை படுக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கும், புதுச்சேரி சுகுமாறன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் அளித்த பதிலில், “ஆக்சிஜனைப் பிற மாநிலங்களுக்கு மாற்றம் செய்யக்கூடாது என முதல்வர் கடிதம் எழுதியது பற்றாக்குறை காரணமாக அல்ல. பாதிப்படைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஆக்சிஜன் இருப்பு குறைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பதாகக் குற்றச்சாட்டு வந்துள்ளதால் புகார்களை 104 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரெம்டெசிவிர் பொது விற்பனை கவுண்டரை 2 அல்லது 3 நாட்களில் திறக்க உள்ளோம். மூன்றடுக்கு முகக்கவசம், N-95 முகக்கவசம், கையுறை, மருந்துகள் எனப் போதுமான அளவிற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீஷியன் ஆகியோர் போதுமான அளவிற்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரைக் கிளை, செவிலியர் தேர்விற்குத் தடை விதித்துள்ளது. www.stopcorona.tn.gov.in என்ற இணையதளத்தில் தற்போதைய படுக்கை எண்ணிக்கை விவரங்கள் தினமும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. 52 லட்சம் மக்கள் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் 104 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்க சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிகரிக்கும் ஆக்சிஜன் அளவைக் கருத்தில் கொண்டு வேறு மாநிலங்களுக்கு அனுப்புவதில் தயக்கம் உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிப்பது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நாளொன்றுக்கு 1,050 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யமுடியும் என்றாலும், அதில் 35 டன் மட்டுமே மருத்துவப் பயன்பாட்டிற்குத் தேவையான திரவ ஆக்சிஜனாக உள்ளது.
முழுவதுமாக மாற்றுவதற்குக் கட்டமைப்பை உருவாக்க 6 முதல் 9 மாதங்கள் ஆகும். தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் உற்பத்திக் கட்டமைப்பு முழுவதையும், மருத்துவ உற்பத்திக்கான கட்டமைப்பாக மாற்றுவதாக ஸ்டெர்லைட் உறுதி அளித்துள்ளது. இரண்டரை லட்சம் ரெம்டெசிவிர் மருந்து கேட்ட நிலையில் 50 ஆயிரம் மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் தரப்பு பதிலில், “தமிழக அரசிடம் ஆலோசித்த பிறகே ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு 45 டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. தமிழக அரசிடம் ஏப்ரல் 18ஆம் தேதி தெரிவித்த பிறகே மாற்றி அனுப்பப்பட்டது. மாநில அரசின் எதிர்ப்பு குறித்து மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
மூத்த வழக்கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் உள்ளிட்டோர் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.
சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அளித்த பதிலில், “கரோனா பாதித்தவர்களில் 50 முதல் 55 சதவீதம் வரையிலானவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். ஆக்சிஜன் தேவை குறைந்தவர்கள் கோவிட் கேர் சென்டருக்கு அனுப்பப்படுகின்றனர். சென்னையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2,400 படுக்கைகள் கொண்ட கூடிய மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 1,200 படுக்கைகள் கொண்ட மையம் நாளை திறக்கப்பட உள்ளது. இதேபோல மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உருவாக்குகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பொது சுகாதாரத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது. மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாகத் தெரியவந்தால், மே 2 வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிப்பதுடன், அதை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளிவைக்க உத்தரவிடுவோம். அரசியல் கட்சிகளின் துணை இல்லாமல் கள்ளச்சந்தையில் எதையும் விற்க வாய்ப்பில்லை. உயிர் காக்கும் விவகாரத்தில் விஐபி கலாச்சாரம் இருக்கக் கூடாது.
தொற்று உள்ளதா என சோதனை செய்யாமல் அரசு மருத்துவமனைகளில் மக்கள் குவிவதால் பதற்றம் நிலவுகிறது. ரெம்டெசிவிர் மருந்தை அனைவரும் தினமும் பயன்படுத்த வேண்டியதில்லை. வென்டிலேட்டர், ரெம்டெசிவிர் ஆகியவை யாருக்குத் தேவைப்படுகிறது என்பது குறித்து மக்களுக்குப் பத்திரிகை, ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
நேற்று அரசு அறிவித்த முழு ஊரடங்கின்போது, வெளியில் வராமல் கட்டுப்பாடோடு இருந்த பொதுமக்களின் பங்களிப்பு அளப்பரியாதது. கள்ளச்சந்தையில் உயிர் காக்கும் மருந்துகள் விற்கப்படுவது குறித்து புகாரோ, வீடியோ வரும் வரை காத்திருக்காமல் மருந்துக் கட்டுப்பாட்டாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வித சமரசமும் இல்லாமல் கரோனா கட்டுப்பாடுகளைத் தமிழகம் மற்றும் புதுச்சேரி வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்க வேண்டும். செங்கல்பட்டு, குன்னூர் தடுப்பூசி மையத்தை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும். விமான நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகளில் கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். விதிகளைக் கடைப்பிடித்து மாநிலத்திற்குள் பயணிக்க எவ்விதத் தடையும் இல்லை.
மருந்து, தடுப்பூசி, தனியார் மருத்துவமனையில் அனுமதி, கட்டணம் ஆகியவற்றை மாநில அரசு கண்காணிக்க வேண்டும். கள்ளச்சந்தையில் உயிர் காக்கும் மருந்துகள் விற்பதைத் தடுக்க மருந்துக் கட்டுப்பாட்டாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மே 1 (அரசு விடுமுறை) மற்றும் 2 (வாக்கு எண்ணிக்கை) தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தமிழக, புதுச்சேரி அரசுகள் பரிசீலிக்க வேண்டும். தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை அணுகுபவர்களுக்கு மட்டும் அனுமதிக்கும் வகையில் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்'' என்று பரிந்துரை செய்து, வழக்கை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT