Published : 26 Apr 2021 03:43 PM
Last Updated : 26 Apr 2021 03:43 PM

மே 2 வாக்கு எண்ணிக்கையை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்குத் தள்ளிவைக்க நேரிடும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை

மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாக்கு எண்ணிக்கை நடப்பதாகத் தெரியவந்தால் மே 2 வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்து ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைக்கவும் தயங்கமாட்டோம் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது குறித்து தகவல் வெளியானது. இதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்தனர்.

இதுகுறித்து பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பான வழக்கைத் தாமாக முன்வந்து கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

ஆக்சிஜன், மருந்து உள்ளிட்டவற்றை வேறு மாநிலங்களுக்கு அனுப்பிய விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்டுத் தெரிவிக்க தமிழக தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, பிற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை தமிழகத்துக்கு வந்துவிடக் கூடாது என அறிவுறுத்தியது.

ரெம்டெசிவிர் மருந்து இருப்பு உள்ளதா? வென்டிலேட்டர் போதிய அளவு உள்ளதா? ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதா? தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ளதா? என வழக்கு விசாரணையில் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதால் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். தேர்தல் நடைமுறை உள்ளதால் அதிகாரிகள் அவசர காலகட்டத்தில் இடையூறின்றி முடிவெடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசுத் தலைமை வழக்கறிஞர் விரிவாக பதிலளித்தார். ஆக்சிஜன் இருப்பு, தேவை, தயாரிக்கப்படுவது குறித்து பதிலளித்தார். தற்போது சிகிச்சையில் உள்ள 84 ஆயிரம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படவில்லை. 9,600 வென்டிலேட்டர்கள் அரசு மருத்துவமனையில் உள்ளன. தனியார் மருத்துவமனையில் 6,000 வென்டிலேட்டர்கள் உள்ளன என்று தெரிவித்தார். இதை நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர். வருகிற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கரோனா சூழலைத் தமிழக அரசு சிறப்பாகக் கையாண்டு வருவதற்கும், போதிய கையிருப்பு வைத்திருப்பதற்கும், நீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளித்ததற்கும் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், தடுப்பூசி கையிருப்பு, மருத்துவமனைகளின் படுக்கை விவரம் குறித்த விவரங்களை ஏப்ரல் 26ஆம் தேதி (இன்று) தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆக்சிஜனைப் பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வது குறித்து முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். பற்றாக்குறை காரணமாக அவர் எழுதவில்லை, பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் இருப்பு குறைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கடிதம் எழுதியுள்ளார் என்று தெரிவித்தார்.

அதேபோல் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பதாகப் புகார் இருந்தால் அதுகுறித்து 104 என்கிற தொலைபேசியில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்து, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விளக்கினார்.

அப்போது மூத்த வழக்கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணன், ரெம்டெசிவிர் மருந்துவமனையில் கிடைப்பதில் சிக்கலாக உள்ளது. வெளியில் கிடைப்பது குறித்த தகவலும் இல்லை. கள்ளச்சந்தையில் அதிக விலையில் விற்கப்படுகிறது. என்ன விலை என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல் இல்லை எனத் தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதத்தில், ஆக்சிஜன் அடைக்க ரூ.100 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 1000 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவமனைக்கு வரும்போதே ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்தால்தான் அனுமதிப்போம் என்றும் சொல்கிறார்கள். இது செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தவே செய்கிறது என்று தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களை முழுமையான கரோனா சோதனைக்குப் பிறகே அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், கள்ளச்சந்தையில் ஒரு ரெம்டெசிவிர் ரூ.30 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, பொது சுகாதாரத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது எனத் தெரிவித்தது. மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாக்கு எண்ணிக்கை நடப்பதாகத் தெரியவந்தால் மே 2 வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்து ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைக்கவும் தயங்கமாட்டோம். அரசியல் கட்சிகள் துணை இல்லாமல் கள்ளச்சந்தையில் அனைத்தும் விற்க முடியாது. உயிர்காக்கும் இப்பிரச்சினையில் விஐபி கலாச்சாரம் கூடாது என்று தெரிவித்து வழக்கை மதியத்துக்கு ஒத்திவைத்தது.

மதியம் வழக்கில் வாதம் தொடர்கிறது. ஏற்கெனவே காலையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக கண்டித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கிலும் கடுமையாக எச்சரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x