Published : 26 Apr 2021 02:31 PM
Last Updated : 26 Apr 2021 02:31 PM

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்: சத்யபிரதா சாஹு 

சென்னை

மே.2-ல் நடக்கும் வாக்கு எண்ணிக்கை அன்று வரும் கட்சிகளின் முகவர்கள் 72 மணி நேரம் முன்னர் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6 அன்று ஒரே கட்டமாக நடந்தது. தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்த மின்னணு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. மே 2 அன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களாகச் செயல்படும். இம்மையங்களில் கரோனா தடுப்புப் பணிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் கரோனா இரண்டாவது அலை பரவல் தமிழகத்தில் வேகமாகப் பரவி வருவதை அடுத்து வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் கட்சிகளின் முகவர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் முகவர்கள் 72 மணி நேரம் முன் ஆர்டிபிசிஆர் சோதனை எடுத்து நெகட்டிவ் எனச் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதி அல்லது கரோனா தடுப்பூசி முதல்கட்டத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அதற்கான சான்றிதழைக் காட்டினால் மட்டுமே அனுமதி எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ''மையத்தில் மேஜைகள் அமைப்பது சம்பந்தமாக 14 மேஜைகள் அமைக்கப்படும். அதற்கு அதிகமாகப் போடப்பட்டாலும் ஒவ்வொரு மேஜைக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது சந்தேகம் என அரசியல் கட்சிகள் எழுப்பினால் அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் உபயோகப்படும். வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்குத் தொடங்கப்படும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

இதுதவிர சமூக இடைவெளி, முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்துவது, சுகாதாரத் துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது எனத் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது'' என்று சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x