Published : 26 Apr 2021 11:50 AM
Last Updated : 26 Apr 2021 11:50 AM
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பிளாண்ட் மட்டும் தற்காலிகமாக செயல்பட அனுமதிக்கலாம் என, கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள நிலையில் தங்களை அனுமதித்தால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து தருவதாக வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரியது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நாட்டில் நிலவும் கரோனா இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி வேதாந்தா நிறுவனம் மீண்டும் உள்ளே நுழைய முயல்கிறது, இந்த சூழ்ச்சியில் சிக்க யாரும் தயாராக இல்லை என்று அறிக்கை விட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலும் கடுமையான எதிர்ப்பலை கிளம்பியது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில், பாஜக தலைவர்கள் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என்று தெரிவித்தனர். டாக்டர்கள் சங்கமும் ஆக்சிஜன் தேவை வரும் காலத்தில் அதிகரிக்கும், ஆகவே ஸ்டெர்லைட் ஆலையை அரசே கையகப்படுத்தி தயாரிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், தமிழகத்துக்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வரும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை பயன்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்கிற உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு தமிழக அரசின் பதில் என்ன என்பது குறித்து அறிய அனைத்துக் கட்சிக்கூட்டம் இன்று (ஏ. 26) முதல்வர் பழனிசாமி தலைமையில் கூட்டப்பட்டது.
இக்கூட்டத்தில், திமுகவின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மற்றும் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., ஆகியோர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:
"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்திய வேதாந்தா நிறுவனம், 'ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதியுங்கள். அந்த ஆக்சிஜனை இலவசமாக வழங்குகிறோம்' என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, அதில் தமிழக அரசும் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளது.
அந்த மனுவினை ஏற்றுக் கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், 'தமிழக அரசே அந்த ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலையை ஏன் எடுத்து நடத்திடக் கூடாது' என்று கேள்வியும் எழுப்பியுள்ளது.
'மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, மாநில அரசே இந்த ஆலையை எடுத்து ஆக்சிஜனை தயாரிக்கலாம்' என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ள கேள்வி, இன்றைக்கு நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் உச்சபட்ச நிலையை அனைவருக்கும் உணர வைக்கிறது.
அதே நேரத்தில், நாம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை மறந்து விட முடியாது. அதில் 13 அப்பாவிகள் உயிரிழந்து, அந்தக் குடும்பங்கள் எல்லாம் இன்றும் நிலைகுலைந்து நிற்கின்றன. தூத்துக்குடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பையும் நாம் புறக்கணித்து விட முடியாது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்த நேரத்தில், ஏப்ரல் 23-ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில் கூட, தூத்துக்குடி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள். அவர்களின் எதிர்ப்பையும் நாம் உதாசீனப்படுத்திட முடியாது.
அதேசமயம், தூத்துக்குடி மக்கள் மனிதநேயத்தின் மறுபக்கமாக திகழுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், ஒருவருக்கு ஆபத்து என்றால் உடனே ஓடிச் சென்று உதவிட இதயம் கொண்டவர்கள் அந்த மக்கள்.
நாடு முழுவதும், ஏன், தமிழ்நாட்டிலேயே கூட ஆக்சிஜன் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில், 'ஸ்டெர்லைட் ஆக்சிஜன் ஆலையை' மட்டும் இயக்கி, மக்களைக் காத்திட ஆக்சிஜன் தயாரிப்பது குறித்து, மனிதநேயத்தின் அடிப்படையில் நாம் எடுக்க வேண்டிய முடிவுதானே தவிர, ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அல்ல.
நாட்டு மக்கள் எல்லாம் தமிழ்நாட்டை நோக்கி ஆக்சிஜன் கோரிக்கையை வைக்கிறார்கள். உச்ச நீதிமன்றமே ஏன் மாநில அரசே அதை தயாரித்துக் கொடுக்கக் கூடாது என்று தமிழகத்தைப் பார்த்துக் கேட்கிறது. இந்த நேரத்தில் ஒருமைப்பாட்டின் பக்கம், மனிதாபிமானத்தின் பக்கம் எப்போதும் நிற்கும் தமிழகம் ஆக்சிஜன் வழங்குவதிலும் முன்னணியில் நின்றது என்ற பெருமையும் நாம் பெறக் கூடியதுதான்.
ஆகவே, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் கருத்துகளை முன்வைக்கும் போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பிளாண்ட் மட்டும் செயல்பட அனுமதிப்பது என்றால், முக்கியமான சில கருத்துகளை முன்வைக்க வேண்டும். அதில்,
* இந்த அனுமதி தற்காலிகமானது.
* அதுவும் ஆக்சிஜன் தயாரிக்க மட்டுமே இந்த அனுமதி. வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்கக் கூடாது.
* ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்பதை கண்காணித்திட, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்திட வேண்டும்.
* அக்குழுவில் தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஸ்டெர்லைட் போராட்டக் குழு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிட வேண்டும்.
* ஆக்சிஜன் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட காலவரம்புக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும்.
* இப்போது ஆக்சிஜன் தயாரிக்க வழங்கப்படும் அனுமதியை எக்காரணம் கொண்டும் ஒரு முன்னுதாரணமாக வைத்து - ஆலையை நிரந்தரமாக திறக்க அனுமதி கோரக்கூடாது என்று அரசு உத்தரவிலேயே தெளிவுபடுத்திட வேண்டும்.
* ஸ்டெர்லைட் ஆலையில் இந்த அனுமதியின் பெயரில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழக மக்களுக்கு தேவைப்படும் அளவுக்கு இலவசமாக அளிக்க வேண்டும்.
* மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையின் சொந்த மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது. தமிழக அரசுதான் மின்சாரம் வழங்க வேண்டும்.
நாங்கள் கூறிய இந்தக் கருத்துகளை, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அழுத்தமான கருத்துகளாக முன்வைக்க திமுகவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு கனிமொழி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT