Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM
வார்டு உறுப்பினர் தேர்தல் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் வரை 214 முறை தேர்தலில் தோல்வியடைந்து தேர்தலில் அதிகமுறை தோல்வியடைந்த சாதனையாளர் என ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனத்தின் சான்றிதழ் மேட்டூர் கே.பத்மராஜன் பெற்றுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரைச் சேர்ந்தவர் பத்மராஜன், தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் இவர் வார்டு உறுப்பினர் தேர்தல், கூட்டுறவு சங்கத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல், மாநிலங்களவைத் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல், இடைத் தேர்தல்கள் என அனைத்து தேர்தல்களிலும் அனைது மாநிலங்களிலும் சுயேச்சையாக போட்டியிட்டு இதுவரை 214 முறை தோல்வியடைந்துள்ளார்.
கடந்த 1988-ம் ஆண்டு முதல் தேர்தல்களில் போட்டியிடும் பத்ம ராஜன், கருணாநிதி, ஜெயலலிதா, கர்நாடகாவில் பங்காரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, எடியூரப்பா, கேரளாவில் கரு ணாகரன், ஏ.கே.அந்தோணி, ஆந்திராவில் ஒய்.எஸ்.ராஜ சேகர ரெட்டி, புதுச்சேரியில் நாராயணசாமி என முதல்வர் வேட்பாளர் களை எதிர்த்து தேர்தலில் போட்டி யிட்டுள்ளார்.
தற்போது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார்.
இதுவரை 218 தேர்தல்களில் பத்மராஜன் போட்டியிட்ட நிலையில், தேர்தலில் 214 முறை தோல்வியை சந்தித்த (சாதனை சான்றுக்கு அனுப்பியபோது 214 முறை தோல்வி) சாதனையாளர் என ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.
இதுதொடர்பாக கே.பத்மராஜன் கூறியதாவது:
நான் தற்போது வரை 218 தேர்தல்களை சந்தித்துள்ளேன். எம்.ஏ. படித்துள்ள நான் டயர் ரீட்ரேடிங் கடையை நடத்தி வருகிறேன். தேர்தல்களில் போட்டியிட இதுவரை ரூ.50 லட்சத்துக்கும் மேல் செலவு செய்திருக்கிறேன். என்னுடைய மனைவி ஸ்ரீஜா நம்பியார், மகன் ஸ்ரீஜேஸ் பத்மராஜன் ஆகியோர் எனது தேர்தல் ஆர்வத்தை அங்கீகரித்து, எப்போதும் என்னை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும், விஐபி-க்களை எதிர்த்தும் சாதாரண நபர் போட்டியிட முடியும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன். தோல்விக்காக நான் ஒருபோதும் கலங்கியதில்லை. அதனால், எனது தோல்விக்கு சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT