Published : 26 Apr 2021 03:19 AM
Last Updated : 26 Apr 2021 03:19 AM

அரசின் கறவை மாடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு பேரணாம்பட்டு வேளாண் உதவி இயக்குநர் மீது வழக்குப்பதிவு: வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை

வேலூர்

தமிழக அரசின் மானிய விலையில் கறவை மாடு வழங்கும் திட்டத்தில் உறவினர்கள் பெயரில் மாடுகளை பெற்று முறைகேடு செய்ததுடன் ரூ.5 லட்சம் மதிப்பிலான உரங்கள் வாங்க போலி பில்களை சமர்ப்பித்த புகாரில் பேரணாம்பட்டு வேளாண் உதவி இயக்குநர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, வேளாண் உதவி இயக்குநராக பணியாற்றி தற்போது வேலூரில் பணியாற்றி வருபவர் சத்தியலட்சுமி. இவர், கடந்த 2017-18-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தமிழக அரசின் மானிய விலையில் கறவை மாடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு 2019-20-ம் நிதியாண்டில் நடைபெற்றது. பேரணாம்பட்டு மற்றும் மிட்டாளம் கிராமத்தில் 100 பயனாளிகள் தேர்வு செய்து, 100 கறவை மாடுகள் வழங்க ஒதுக்கீடு வரப்பெற்றது.

இந்தத் திட்டத்தில் பயனாளிகள் பெயரில் ஓர் ஏக்கர் விவசாய நிலம் கண்டிப்பாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். இதில், 25 ஆயிரம் ரூபாய் விவசாயி வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும், 5 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய நிலத்தில் தீவன பயிர் வளர்ப்பதற்கான உரங்கள் வாங்க நிதி வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் விண்ணப்பம் பெறும்போது, விவசாயி பெயர்,கிராமத்தின் விவரம், சாதிச்சான் றிதழ், ஆதார் அட்டை நகல், நிலத்தின் சர்வே எண், பயிர் சாகுபடி பரப்பளவு விவரம், எந்த வகையான பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது, விவசாயி வங்கி கணக்கு எண் விவரம் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

அரசின் திட்டத்தில் பேரணாம்பட்டு வட்டார வேளாண் உதவி இயக்குநராக இருந்த சத்தியலட்சுமி, முறைகேடாக தனது உறவினர்கள் பெயரில் கறவை மாடுகளை வாங்க அனுமதி அளித்துள்ளது தெரியவந்துள்ளது. சத்தியலட்சுமியின் தந்தை கருணாநிதி, உறவினர் விஜயா கிருஷ்ணன், சகோதரரின் மனைவி ஆர்த்தி, அன்பு, லட்சுமி, ஞானம்பாள், லலிதா, ஜெயராமன் ஆகியோர் பெயரில் கறவை மாடுகளை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் 100 பயனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பில் உரங்கள் வாங்க மொத்தம் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் போலி பில்களை அரசுக்கு சமர்ப்பித்து பணம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த், வேளாண் உதவி இயக்குநராக பணிபுரிந்த சத்தியலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x