Published : 25 Apr 2021 05:02 PM
Last Updated : 25 Apr 2021 05:02 PM
புதுச்சேரி மத்திய சமையற்கூடத்தில் தரமான உணவு சமைக்கப்படுகிறா என ஆளுநர் தமிழிசை ஆய்வு செய்தார். உணவின் தரத்தை உறுதி செய்ய தாமே உணவு பொட்டலத்தையும் வாங்கிச் சென்றார்.
புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேவேலையில் இந்த பெருந்தொற்றுச் சூழலில் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.
புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு ஏழை மக்களுக்குப் பொருளாதாரச் சுமையைக் குறைக்க அரசின் பாண்லே கடைகள் மூலமாக ரூ. 1க்கு முகக்கவசம், 50 மி.லி. கொண்ட கிருமிநாசினி ரூ.10க்கும் விற்கப்படுகிறது.
இதேபோல் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.10க்கு குறைந்த விலையில் மதிய உணவு தரும் முறையும் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. இவற்றை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
இதனிடையே புதுச்சேரியில் வேறு சில இடங்கள், பாண்லே கடைகளில் குறைந்த விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்வது குறித்தும், அதற்காக சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக இன்று(ஏப். 25) ஆளுநர் தமிழிசை சண்முகாபுரத்தில் உள்ள மத்திய சமையற்கூடத்தைப் பார்வையிட்டு, சுகாதார முறையில் தரமான உணவு சமைக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். உணவின் தரத்தை அறிய தானே, உண்ண உணவுப் பொட்டலத்தையும் வாங்கிச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT