Published : 25 Apr 2021 04:02 PM
Last Updated : 25 Apr 2021 04:02 PM
புதிய தேசியக் கல்விக் கொள்கை-2020 17 மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. உலகின் மூத்த மொழியான தமிழில் புதிய கல்விக் கொள்கையை மொழிமாற்றம் செய்து வெளியிடாதது மிகவும் வருத்தமளிக்கிறது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
“மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கை-2020 தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. உலகின் மூத்த மொழியான தமிழில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு மொழிமாற்றம் செய்து வெளியிடாதது மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்தியாவின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு கடந்த ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை ஆவணம் கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாம், பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் மொழியில் இந்த ஆவணம் வெளியிடப்படவில்லை.
புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனாலும், புதிய கல்விக் கொள்கை இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில், அதை அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது தான் நியாயமானதாக இருக்கும். அதன்படி எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் புதிய தேசியக் கல்விக் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
குறிப்பாக எட்டாவது அட்டவணை மொழிகளில் அதிக அளவிலான மக்களால் பேசப்படும் தமிழ் மொழியில் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதை மத்திய அரசு செய்யத் தவறியதை நியாயப்படுத்த முடியாது. மத்திய அரசின் தமிழ் மொழிக்கு எதிரான இந்த அணுகுமுறை தவறானது. இந்தத் தவற்றை மத்திய அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையை உடனடியாக தமிழ் மொழியிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட மத்திய அரசு முன்வர வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய சிக்கல் மீண்டும் ஏற்படாமல் தடுக்க தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் 22 மொழிகளையும் இந்தியாவின் அலுவல் மொழிகளாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”.
இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT