Last Updated : 25 Apr, 2021 03:31 PM

 

Published : 25 Apr 2021 03:31 PM
Last Updated : 25 Apr 2021 03:31 PM

முழு நேர பொது ஊரடங்கால் வெறிச்சோடிய திருச்சி

திருச்சி

முழு நேர பொது ஊரடங்கு காரணமாக ஆள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து இல்லாமல் திருச்சி மாநகர் உட்பட மாவட்டத்தில் அனைத்துச் சாலைகளும் இன்று வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏப்.20-ம் தேதி முதல் ஏப்.30-ம் தேதி வரை இரவு நேர பொது ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர பொது ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது.

இதன்படி, முதல் முழு நேர பொது ஊரடங்கு இன்று அமலில் உள்ளது. இரவு நேர பொது ஊரடங்கைத் தொடர்ந்து இந்த முழு நேர பொது ஊரடங்கு வருவதால், நேற்று இரவில் இருந்தே ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இதனால், திருச்சி மாநகர் உட்பட மாவட்டத்தில் சாலைகள் அனைத்தும் ஆள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

எப்போதும் பரபரப்பாக கூட்டமாக இருக்கும் முக்கிய கடை வீதிகளான என்எஸ்பி சாலை, மேல புலிவார்டு சாலை, பெரிய- சின்ன கடை வீதிகள், பெரிய கம்மாளத் தெரு, காந்தி மார்க்கெட், மலை வாசல், தஞ்சாவூர் சாலை மற்றும் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்கள் வழக்கமான வாகன இரைச்சல் இன்றி அமைதியாக காணப்பட்டன.

அம்மா உணவகங்கள் மற்றும் சில உணவகங்கள், பால் பாக்கெட் கடைகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் ஆகியவை தவிர பிற கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அம்மா உணவகங்களில் அங்கேயே உணவருந்த அனுமதிக்கப்பட்ட நிலையில், பிற உணவகங்களில் ஆன்-லைன் மூலம் வரப்பெறும் ஆர்டர்களுக்கு மட்டுமே உணவு வகைகள் விநியோகிக்கப்பட்டன.

இதையொட்டி, திருச்சி மாநகரில் செயல்பட்ட சில ஹோட்டல்களின் அருகே உணவு விநியோக ஆர்டர் வரும் நம்பிக்கையில் தனியார் உணவு விநியோக நிறுவன ஊழியர்கள் காலை முதலே காத்திருந்தனர்.

இதேபோல், விமானம் மற்றும் ரயில்களில் செல்ல முன்பதிவு செய்தவர்கள், பயணச் சீட்டை காண்பித்து வாடகை வாகனங்களைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தாலும், விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்குச் செல்ல மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளதாகக் கூறி திரும்பிச் செல்லும்போது போலீஸார் அபராதம் விதிப்பதாக வாடகை வாகன ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போலீஸாரின் அபராதத்துக்கு பயந்து பெரும்பாலான வாடகை வாகன ஓட்டுநர்கள் பணியில் ஈடுபடவில்லை. இதனால், ரயில்கள் மூலம் திருச்சி ஜங்ஷன் சந்திப்பில் வந்திறங்கிய பலரும் பேருந்து, வாடகை வாகன வசதி இல்லாததால் தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல் ரயில் நிலைய வளாகத்திலேயே காத்திருக்கின்றனர்.

மாவட்டத்தின் முக்கிய இடங்கள், சாலைகளில் போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் வெளியே வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x