Published : 23 Dec 2015 07:46 AM
Last Updated : 23 Dec 2015 07:46 AM
‘நாட்டில் உள்ள நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்பட்டால் மட்டுமே நதிநீர் இணைப்பு திட்டத்தை சுலபமாக நிறைவேற்ற முடியும். இல்லையெனில் சமு தாயம் பெரியளவில் பாதிப்புக்குள் ளாகும். நீர் நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படாததற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு’ என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
நதிகளை இணைக்க வலியு றுத்தி பெரம்பலூர் பஸ் நிலையம் அருகில் ஒரு மாதம் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.முத்துகிருஷ்ணன் வாதிட்டார்.
அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப் பாண்டியன் வாதிடும்போது, உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டுள்ள பகுதி தேசிய நெடுஞ் சாலைக்கு மிக அருகில் அமைந் துள்ளது. ரங்கம், திருவானைக் காவல், சமயபுரம் கோயில்களுக்கு பக்தர்கள் இந்த வழியாகவே செல்கின்றனர். தேசிய நெடுஞ் சாலைப் பகுதிகளில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளது. இங்குப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நதிகளை இணைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது. இந்தக் கோரிக்கை ஆங்கிலேயர் காலத்தில் சர் ஆர்தர் காட்டன் மற்றும் சர் சி.பி.ராமசாமி அய்யர் ஆகியோரால் முதலில் எழுப்பப்பட்டது. மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அண்மைக்காலங்களில் கோரி வந்தார். நதிகளை இணைப்பதால் மாநிலங்கள் இடையிலான நதி நீர் பிரச்சினை இல்லாமல் போவது டன், இந்தியாவில் ஒற்றுமை நிலவும், விவசாயம், பொருளா தாரம் வளர்ச்சி அடையும், மொத்த உற்பத்தி அதிகரிக்கும். நதிகளை இணைப்பதால் எண் ணற்ற பலன்கள் கிடைக்கும். இருப்பினும் இத்திட்டத்தை நிறை வேற்ற அரசுகள் ஏன் தாமதம் செய்கின்றன என ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நதி நீர் இணைப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் உண்மையான முறையில் போராட்டங்கள் நடை பெற வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தற்போது நீர் நிலைகள் செங்கல், சிமெண்ட் கற்களால் நிரம்பியுள்ளன. நீர் நிலைகள் முறையாக பராமரிக்கப் பட்டால் மட்டுமே, நதி நீர் இணைப்புத் திட்டத்தை சுலபமாக நிறைவேற்ற முடியும். இல்லாவிடில் சமுதாயம் பெரியளவில் பாதிப்புக்குள்ளாகும். நாட்டில் ஆறுகள், குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள் முறையாக பராமரிக்கப்படாததற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு.
14.11.1985-ல் ‘தி இந்து’ நாளிதழ் முதல் பக்கத்தில் சென்னையில் பலத்த மழை காரணமாக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தனது வீட்டை ஹோட்டலுக்கு மாற்றினார் எனச் செய்தி வெளியாகியுள்ளது. அதுபோல் அதிகாரிகள் விழிப்புடன் இருந்து மழை சேதங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த வழக்கைப் பொறுத் தவரை மனுதாரர் சங்கத்துக்குப் போராட்டம் நடத்த அனுமதி மறுத்து போலீஸார் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் போராட்டம் நடத்துவதற்கு புதிய இடத்தைத் தேர்வு செய்து அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளிக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு மாதம் போராட்டம் நடத்த அனுமதி வழங்க முடியாது. அவ்வாறு அனுமதி வழங்கினால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT