Published : 25 Apr 2021 06:09 AM
Last Updated : 25 Apr 2021 06:09 AM
முழு ஊரடங்கில் இருந்து திருப்பூர் தொழில்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது குழப்படைய செய்திருப்பதாக, பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வாராந்திர முழு ஊரடங்கு இன்று (ஏப். 25) கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு கரோனா ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென, தமிழக அரசை தொழில்துறையினர் வலியுறுத்தினர். அதன்படி, பனியன் உற்பத்தி துறையை அத்தியாவசிய சேவை துறையாக அறிவித்து, ஊரடங்கில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. இதற்கிடையே, இன்று முழு ஊரடங்கில் பனியன் நிறுவனங்களை நடத்துவது தொடர்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடையே குழப்பம் எழுந்துள்ளது. நிறுவனத்தில் இன்று உற்பத்தியை தொடரலாமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
ஒருவிதமான ஏமாற்றம்
இதுதொடர்பாக, திருப்பூர் கோயில்வழியைச் சேர்ந்த பனியன் உற்பத்தியாளர் எம்.பெருமாள் கூறும்போது, "விடுதி வசதி இருந்தால் பனியன் உற்பத்தியை தொடங்கலாம் என்கிறார்கள். ஆனால், எங்கள் நிறுவனத்தில் அதுபோன்ற வசதி இல்லை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வந்து பணிபுரியும் நிறுவனம்தான். அவர்கள் வாகனங்களில் வந்து செல்பவர்கள். இந்த அறிவிப்பு எங்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
முழு ஊரடங்கின்போது வாகனங்கள் மூலம் தொழிலாளர்கள் நிறுவனங்களுக்கு வரலாமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த குழப்பத்தால், நிறுவனத்துக்கு விடுப்பு அளிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த அறிவிப்பால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நிச்சயம் பாதிக்கப்படும். ஆனால், ஒருவிதமான ஏமாற்றம் தருவதுபோல உள்ளது" என்றார்.
என்ன செய்வதென்று தெரியவில்லை
திருப்பூரை சேர்ந்த இளம் உற்பத்தியாளர் மகேஷ் கூறும்போது, "இந்த தளர்வு உண்மையிலேயே எங்களை குழப்பமடையச் செய்துள்ளது. அவசர ஆர்டர் உள்ளது. அதேசமயம், வெளிப்பகுதியில் இருந்து தொழிலாளர்கள் நிறுவனத்துக்கு வந்து வேலை செய்ய வேண்டிய நிலை. தொழிலாளர்களும் குழப்பத்தில் இருப்பதால், என்ன செய்வதென்றே புரியவில்லை. இந்த ஊரடங்கு தளர்வு அறிவிப்பு, தொழில்துறை நகரமான திருப்பூருக்கு எந்த அளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை" என்றார்.
முடிந்தவரை இன்று விடுப்பு
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக அகில இந்திய தலைவர் ஏ.சக்திவேல் கூறும்போது, "கரோனா நோய் தொற்று அலை வேகமெடுத்திருப்பதால், சமூகம் மற்றும் அரசு நலன் கருதி முடிந்த வரை நிறுவனங்களுக்கு இன்று விடுப்பு அளித்துவிடலாம். அதேபோல, அவசரத் தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் பனியன்கள், தூத்துக்குடி, சென்னை துறைமுகங்களுக்கு மட்டுமே இன்று அனுப்ப வேண்டும். வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்ல வேண்டாம்" என்றார்.
அரசின் விதிகள் பின்பற்றப்படும்
திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் கூறும்போது, "தொழில்துறையினருக்கான ஊரடங்கு தளர்வு தொடர்பாக, அரசின் வழிகாட்டுதல்படி விதிகள் பின்பற்றப்படும்" என்றார்.
விடுதி வசதி உள்ளவர்கள், முழு ஊரடங்கான இன்று நிறுவனங்களை நடத்திக் கொள்ளலாம். அவர்களது தொழிலாளர்கள் வெளியே வரத் தேவையில்லை என்பதால், பலரும் நடத்த தயாராக இருப்பதாகவும் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT