Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM
கரோனா சிகிச்சைக்கான மருந்து பதுக்கலைத் தடுக்க கள்ளச்சந்தை வியாபாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுத் தர சட்டத்தில் வழிவகை உள்ளது என்று சட்டவல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா இரண் டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் தினமும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக் கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் தொற்று பாதிப்பு அதி கமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சைக்காக நாள்தோறும் வருகின்றனர். இத னால் மருத்துவ உபகரணங்கள், மருந்துகளுக்கான தேவை அதிகரி த்துள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள கரோனா நோயாளிகளைக் காப் பாற்றுவதற்கு `ரெம்டெசிவிர்’ மருந்து பயன்படுத்தப்படுகிறது. மூச்சுத்திணறல் உள்ளோருக்கு தடையின்றி ஆக்ஸிஜன் செலுத்த வேண்டியுள்ளது.
மருந்துகள் மட்டுமின்றி தரமான முகக்கவசங்கள், கையுறைகள், சானிடைசர், கையுறைகள், பிபி கிட் போன்றவற்றின் தேவையும் அதிகரித்துள்ளது. இதை பயன் படுத்தி அதிக லாபம் ஈட்ட நினைக்கும் சிலர், கரோனா சிகிச் சைக்கான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்து கள்ளச்சந்தைகளில் அதிக விலைக்கு விற்பதாக குற் றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் மூலம் கரோனா சிகிச்சைக்கான மருந் துகளின் விலையை நிர்ணயித்து வெளிப்படைத் தன்மையுடன் அறிவிக்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டவல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை மூத்த வழக்கறிஞர் எம்.ஆர்.காந்தி கூறியதாவது:
கரோனா சிகிச்சைக்குத் தேவை ப்படும் மருந்துகளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று கள்ளச்சந்தை வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் கொள் ளை லாபம் அடைகின்றனர். இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் மூலம் மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச விலையை நிர்ணயித்து, அதை வெளிப்படைத்தன்மையுடன் பொதுவெளியிலும், இணைய தளங்களிலும் வெளியிட வேண்டும்.
அவசர கால நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1957-ன்படி மருந்துப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்து அறிவிப்பதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் 2017-ம் ஆண்டில் மூட்டுவலி தொடர்பான மருந்து விலையை முறைப்படுத்தி மத்திய அரசு அறிவித்தது.
அதேபோல் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி தற்போது மருந்து உற்பத்தி, விற்பனை, விநி யோகத்தை மத்திய, மாநில அரசு கள் கட்டுப்படுத்தலாம். அதற்கு மத்திய அரசின் நுகர்வோர் நல அமைச்சகம், இந்த மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை அத்தி யாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து அவசர ஆணை பிறப்பிக்க வேண்டும்.
மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்வது பற்றி பொதுமக்கள் எளிதாக தகவல் தெரிவிக்க ஏதுவாக கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட வேண்டும். கள்ளச்சந்தை வியாபாரிகள், இடைத்தரகர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுத் தர முடியும். தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT