Published : 24 Apr 2021 05:44 PM
Last Updated : 24 Apr 2021 05:44 PM
புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடாததற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று (ஏப். 24) வெளியிட்ட அறிக்கை:
"ஆர்எஸ்எஸ் இயக்கி வருகின்ற பாஜக அரசு, சாதி, மத வெறி வருணாசிரமத்தை நிலைநிறுத்தத் திட்டம் வகுத்து, தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்த நாடாளுமன்றத்தில், மாபெரும் தலைவர்கள் நீண்ட நெடிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தினர்; வருணாசிரமம் வகுத்த சாதிகளின் பெயரால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு அழுத்தப்பட்டுக் கிடக்கின்ற அடித்தட்டு மக்களை முன்னேற்றுவதற்காக இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அறிமுகம் செய்தனர்.
ஆனால், அந்த அடித்தளத்தையே தகர்த்து நொறுக்கிய பாஜக அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு, கல்வி வேலைவாய்ப்புகளில் 10 விழுக்காடு இடங்களை ஒதுக்கியது.
அதன் அடுத்தகட்டமாக, புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்து இருக்கின்றனர். இந்தியாவின் மாநில மொழிகளை, படிப்படியாக, முற்று முழுதாக ஒழித்துக் கட்டுவதே, புதிய கல்விக் கொள்கையின் முதன்மை நோக்கம் ஆகும்.
இந்தி, சமஸ்கிருத மொழிகளை, இந்தியா முழுமையும் உள்ள அனைத்து மாநில மக்களும் கற்க வேண்டும்; அதற்காக, ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்து, அந்த இரண்டு மொழிகளின் வளர்ச்சிக்காக, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கின்றனர்.
அத்துடன், இதுவரை கற்பிக்கப்பட்டு வந்த உண்மை வரலாற்று நிகழ்வுகளை மறைத்து, கற்பனை, புராண, இதிகாசங்கள், சமஸ்கிருத மொழி வேதங்கள்தான், வரலாறு எனக் கற்பிக்க முனைந்து செயல்பட்டு வருகின்றனர். அதுகுறித்து, இரண்டு நாள்களுக்கு முன்பு விரிவான அறிக்கை கொடுத்து இருந்தேன்.
தமிழ்நாட்டுப் பள்ளிகளிலும், இந்தி, சமஸ்கிருதத்தைப் படித்தாக வேண்டும் என்ற புதிய கல்விக் கொள்கை, தமிழுக்கு, தமிழருக்கு, தமிழ்நாட்டுக்கு எதிரானது என்பதால், அதைத் தமிழகம் முற்று முழுதாக ஒதுக்கித் தள்ள வேண்டும் என்பதை, மதிமுக வலியுறுத்தி வருகின்றது. திராவிட இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்தப் புதிய கல்விக் கொள்கையை, முதலில், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே வெளியிட்டனர். இன்று, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட 17 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருக்கின்றனர். நேபாளி மொழிபெயர்ப்பும் வெளியாகி இருக்கின்றது. ஆனால், தமிழில் வெளியிடவில்லை. காரணம், அந்தக் கல்விக் கொள்கையின் உள்ளடக்கம், தமிழர்களுக்குத் தெரியக்கூடாது; தெரிந்தால் எதிர்ப்புகள் கிளம்பும்; அந்த எதிர்ப்பு இந்தியா முழுமையும் பரவும் என்ற நோக்கத்துடன், திட்டமிட்டு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை.
தமிழ் மொழியின் சிறப்பு, பெருமை என மேடைகளில் முழங்குகின்ற நரேந்திர மோடி அரசின் உள்நோக்கம், வெளிப்பட்டுவிட்டது. இந்தியாவில் ஏழரை கோடி மக்கள் பேசுகின்ற தமிழ் மொழியை, கால வரையறை வகுக்க முடியாத செம்மொழியாம் தமிழைப் புறக்கணித்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் போக்குக்கு, மதிமுகவின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்".
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT