Published : 24 Apr 2021 06:01 PM
Last Updated : 24 Apr 2021 06:01 PM
சமூக நீதியைக் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்பதாக மட்டுமே பார்க்க வேண்டாம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் நடைபெற்ற கனவு தமிழ்நாடு 2021 என்ற கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ''சமூக நீதி என்பது வெறும் எஸ்சி, எஸ்டி ஆகியோருக்கானது அல்ல. சமூக நீதி என்பது சமத்துவத்திற்கானது. சமூக நீதியைக் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்பதாக மட்டுமே பார்க்க வேண்டாம். அது அதிகாரப் பரவலோடு தொடர்புடையது என்பதைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
ஒருவர் சாதியைச் சொல்கிறார். அது பிற்போக்குத்தனமானது. ஒருவர் தமிழன் என்று சொல்கிறார். அது முற்போக்குத்தனமானது என்று நினைக்கக் கூடாது. தமிழன் என்று சொல்வதும் ஓர் அடையாள அரசியல்தான்.
பெண் கல்வி என்பது முக்கியமானது. பெண்களுக்கான அதிகாரம் என்பது முக்கியமானது. அதிலும் பெண்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது மிகவும் முக்கியமானது. ஆணும் பெண்ணும் சமம் என்பது சமூக நீதியின் மிக முக்கியமான ஒன்று.
பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு என்று 33 ஆண்டுகளாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதில் இருந்து ஓர் அங்குலம் கூட முன்னேறவில்லை. அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடியவில்லை, அவ்வளவு நெருக்கடி உள்ளது'' என்று திருமாவளவன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT