Published : 24 Apr 2021 03:25 PM
Last Updated : 24 Apr 2021 03:25 PM
''தலைவர்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன் கட்சியில். அந்தத் தகுதி இல்லாதவர்களை நீக்க வேண்டியது என்னுடைய கடமையாகவும் உள்ளது. நான் அந்த வேலையைச் செய்துகொண்டே இருக்கிறேன்'' என மநீம கருத்தரங்கில் அக்கட்சியின் தலைவர் கமல் பேசினார்.
சென்னையில், உள்ளாட்சியில் தன்னாட்சி என்கிற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் நடத்திய கருத்தரங்கில் கட்சியின் முன்னணியினர், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு பேசினர்.
இந்தக் கருத்தரங்கில் கமல் பேசியதாவது:
“நான் கடந்த 35 ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருப்பது, சாதனை என்பது சொல் அல்ல செயல் என்பதே. இங்கு யார் பேசினாலும் செயல் என்பதைத்தான் அடையாளப்படுத்துகிறார்கள், முன்வைக்கிறார்கள். ஐடியா எல்லோரிடமும் உள்ளது. கிராம சபை, ஊர் சபை உள்ளிட்ட பல விஷயங்கள் மன்னர் காலத்திலிருந்து உள்ளன.
அதைப் பற்றிப் பெருமை பேசிக்கொண்டிருப்பதல்ல. ராஜராஜ சோழன் பெரிய கோயிலைக் கட்டினார் என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. நாம் கட்டிய மருத்துவமனைகள் அதன் திறப்பு விழாவின்போதே இடிந்து விழுகின்றன என்கிற காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் யதார்த்தம்.
அதிலிருந்து மாற்றம் பெற வேண்டும். கிராம சபைகளை நாம் நினைவுபடுத்தினோமே தவிர கண்டுபிடிக்கவில்லை. அதை நாம் இயக்க வேண்டும். வீரம் உள்ளவர்களைத் தேர்வு செய்தால் மட்டும் போதும் என்று நினைப்பதே தவறு. நேர்மையாளர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். நேர்மையிருந்தால் வீரம் தானாக வரும்.
கத்தி, கபடா வைத்து மிரட்டுவது அல்ல வீரம். நேர்மையாக இருந்து மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன் என்பதுதான் வீரம். அப்படிச் சொல்லப்பட்டது ஒரு காலத்தில். நான் என் அனுபவத்தில் பெற்றதைச் சொல்வது என்னவென்றால் அறிவுரை கூறும் இந்தக் கருத்தரங்கில் பேசியவர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்வதுதான் சரியாக இருக்கும்.
நான் பிரச்சாரத்தில் சென்றபோது நான் முழுமையாக அறிந்தது மக்களின் பங்களிப்பு இல்லை என்பதுதான். சட்டம் இருக்கிறது, செயல்படுகிறதா என்பதை ஆராயாமல் அரசு இருக்கிறது. செயல்படும் என்கிற போக்கில் உள்ளனர். இல்லை அது செயல்படுகிறதா என்பதை ஆராய வேண்டும். விஜிலென்ஸ் என்று சொல்வேன். அந்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். அதுதான் ஜனநாயகத்தைக் காப்பாற்றும். மோசமான ஆட்சியாளர்களால் நல்ல விஷயங்கள் சட்டத்தில் எழுதியுள்ளவை மீறப்படும்.
நீங்கள் மநீம கட்சியில் சேர வேண்டும் என்று சொல்லவில்லை. நீங்கள் கட்சியை விமர்சனம் செய்தும், கட்சிக்கு உதவும் வேலையைச் செய்தால் போதும். கட்சியில் சேர்ந்தால் கரம் கூப்பி வரவேற்போம். இல்லை என்றாலும் பரவாயில்லை. கண்காணிப்பு வெளியில்தான் இருக்க வேண்டும். கட்சியில் இருக்கும் துரோகங்கள் நாம் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதை விட வெளியில் இருப்பவர்கள் சொன்னால்தான் புரியவும் செய்யும், வலியும் தெரியும்.
அதை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். விமர்சனங்களுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராக இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் அப்பழுக்கற்ற ஒரு கட்சி என்று நான் சொல்லமாட்டேன். விமர்சனங்களைச் சொன்னால் அப்படியா என்று முழு மனதோடு ஏற்றுக்கொள்வேன். மற்றபடி நம்மில் அழுக்கு இருக்கிறதா என்று துருவித் துருவித் தேடிக்கொண்டிருக்கும் ஒரு ஆளாகத்தான் நான் இருப்பேன்.
தலைவர்களை நான் தேடிக்கொண்டிருக்கிறேன் கட்சியில். அந்தத் தகுதி இல்லாதவர்களை நீக்க வேண்டியது என்னுடைய கடமையாகவும் உள்ளது. அதுவும் கண்காணிப்பில்தான் சேரும். நான் அந்த வேலையைச் செய்துகொண்டே இருக்கிறேன்”.
இவ்வாறு கமல் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT