Published : 24 Apr 2021 12:53 PM
Last Updated : 24 Apr 2021 12:53 PM
கரோனா தொற்று உள்ளவர்கள் தானாக மருந்துகளை எடுக்கக்கூடாது என, ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (ஏப். 24) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"சென்னை மாநகராட்சியில் 12 ஸ்கிரீனிங் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருவொற்றியூர் அரசு மருத்துவமனை, மாதவரம் அரசு மருத்துவமனை, தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை, ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரி, அயனாவரம் ஈஎஸ்ஐ மருத்துவமனை, முகப்பேறு சமூகநலக்கூடம், சென்னை பிரைமரி ஸ்கூல், விக்டோரியா ஹாஸ்டல், சென்னை மேல்நிலைப்பள்ளி, ஹூசைனி ஸ்கூல், என்.எஸ்.டி.ஐ கிண்டி, டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட் ஆகிய 12 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இருந்தால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாமா, கோவிட் கேர் சென்டருக்கு செல்லலாமா, அல்லது மருத்துவமனைக்கு செல்லலாமா என்பது மருத்துவரால் நிர்ணயிக்கப்படும்.
இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு 50-100 பேர் பதற்றத்துடன் வரும்போது படுக்கைகள் இல்லாதது போல் ஒரு தோற்றம் வரும். தற்போது கிட்டத்தட்ட 40% படுக்கைகள் காலியாக உள்ளன. இந்த படுக்கைகளை ஆக்சிஜன் தேவை உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். யாருக்கு ஆக்சிஜன் தேவை இல்லையோ அவர்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்பதுதான் எய்ம்ஸ் மருத்துவ வல்லுநர்களின் கருத்து.
தீவிர அறிகுறி உள்ளவர்கள் 108 எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை எண் 044-46122300, 044-25384520 எண்களை தொடர்புகொள்ளலாம். இந்த எண்களுக்கு தொடர்புகொண்டால் கட்டுப்பாட்டு அறை குழுவினர் உங்களை வழிநடத்துவார்கள். 104 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இதனால் மருத்துவமனைகளில் தேவையற்ற கூட்டம் வராது. பரிசோதனை செய்துகொண்டவர்களுக்கு 24 மணிநேரத்தில் முடிவுகள் கிடைக்கவில்லையென்றாலும் இந்த எண்களுக்கு தொடர்புகொண்டு கேட்கலாம்.
தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. சிலர் ரெம்டெசிவிர் மருந்துகளை தானாக வாங்கி வீட்டிலேயே போட்டுக்கொள்கின்றனர். மருத்துவர்களின் அறிவுரைப்படியே மருந்துகளை எடுக்க வேண்டும். தானாக போட்டுக்கொள்ளக்கூடாது. சிலர் ஜிங்க், அசித்ரோமைசின் போன்ற சாதாரண மருந்துகளிலேயே குணமடைந்துவிடுவர்.
பதற்றத்தைத் தணிக்கும் பணிகளில் எல்லோரும் ஈடுபட வேண்டும். 4,256-க்கும் மேற்பட்ட இடங்களில்தான் 3 பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டுள்ளது. இவற்றில் 3,570 தெருக்கள், 586 குடியிருப்புகள். 17 ஆயிரத்து 157 பகுதிகளில் கிராமப்புறங்களில் 3 பேருக்கும் குறைவாகவே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புறத்தில் 23 ஆயிரத்து 68 பகுதிகளில் 3 பேருக்கும் குறைவாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை முழுமையாக செயல்படுத்தினால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்".
இவ்வாறு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT