Published : 24 Apr 2021 12:01 PM
Last Updated : 24 Apr 2021 12:01 PM
சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் 3 போலீஸார் உயிரிழந்தனர். நேற்றிரவு, இன்று அதிகாலையில் 2 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
சென்னையில் தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்றைய கரோனா பாதிப்பு 13,776 ஆக உள்ளது. சென்னையின் நேற்றைய தொற்று 3,842 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டாவது அலையின் வேகம் மும்மடங்கு உள்ளது. முந்தைய பரவல் போல் அல்லாமல் அறிகுறிகள் அற்ற கரோனா காரணமாக பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வயிற்று வலி, டயரியா போன்ற அறிகுறிகள் இருந்தாலும் கரோனா தொற்று அறிகுறி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றாமல் இருந்தாலே தொற்றில் இருந்து தப்பிக்கலாம், செல்வதாக இருந்தால் முகக்கவசம் கட்டாயம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. கரோனா தொற்று பாதிப்பைத் தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவதும் நடக்கிறது.
சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உளவுத்துறை தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த காவலர் ஒருவர் கரோனா தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தார். சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த கருணாநிதி (48). இவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உளவுத்துறை காவலராக அயல் பணியில் இருந்தார். இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் நேற்றிரவும், மற்றொரு காவலர் இன்று அதிகாலையும் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 காவலர்கள் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் உளவுத்துறை போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் முருகேசன்(51). எம்.கே.பி நகர், கொடுங்கையூரில் வசித்துவந்தார். முருகேசனுக்கு கடந்த 15 ஆம் தேதி இரவு 11:00 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்படவே கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி ரோடில் உள்ள லைஃப்லைன் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. மூச்சுத்திணறல் காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மோசமடைந்ததால் கடந்த 19-ஆம் தேதி அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டு, 12.00 மணியளவில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கோவிட் தீவிர சிகிச்சையில் (Covid-ICU) வார்டில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை கரோனா நெகடிவ் வந்த நிலையில் நேற்றிரவு 7.00 மணி அளவில் உயிரிழந்தார்.
இதேப்போன்று அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமை காவலர் மகாராஜன்(38). இவருக்கு அமுதா என்கிற மனைவியும் 13 வயதில், 9 வயதில் 2 மகள்களும் உள்ளனர். இவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் கடந்த 14-ம் தேதி தொற்றால் பாதிப்படைந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார்.
சென்னையில் 24 மணி நேரத்தில் 3 காவலர்கள் உயிரிழந்தது போலீஸார் இடையே அதிர்ச்சிசையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT