Published : 24 Apr 2021 10:51 AM
Last Updated : 24 Apr 2021 10:51 AM
தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக கரோனா தடுப்பூசிகளை அளிக்க வேண்டும் என, ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் இன்று (ஏப். 24) வெளியிட்ட அறிக்கை:
"நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு, 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் இலவச உணவு தானியங்களை மே மாதம் மற்றும் ஜீன் மாதங்களுக்கு மக்களுக்காக, குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவித்திருக்கும் நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு பசி போக்க உதவிகரமாக உணவு தானியங்களை அளிக்க மத்திய அரசு அறிவித்து இருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. இந்த அறிவிப்பை வரவேற்று தமாகா மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
தமிழகத்தில் கரோனா நோய் தொற்று அதிகமாக பரவிவரும் நிலையில், அவற்றில் இருந்து மக்களை காக்கும் விதமாக, நாள்தோறும் இரண்டு லட்சம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் வரும் 10 நாட்களுக்குத் தேவையான 20 லட்சம் தடுப்பூசிகளை முன்னரே அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருக்கிறார். அவற்றை உடனடியாக தமிழகத்திற்கு அளித்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாக மத்திய அரசை கேட்டுக்கொண்டுடுள்ளார்.
அதோடு, குறிப்பாக நோய்தொற்று அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு அவற்றின் தேவைக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 47.3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இரண்டாவது தடுப்பூசி போடுபவர்களுக்கு எந்த காலதாமதமும் இல்லாமல் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கால தாமதம் இல்லாமல் அனைவருக்கும் அளித்து உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று, மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக தடுப்பூசிகளை அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT