Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

இன்று உலக கால்நடை மருத்துவ தினம்: விலங்குகள் நலன் மூலமே மனிதர்கள் நலனை பாதுகாக்க முடியும்

மதுரை

உலக கால்நடை மருத்துவ தினம், விலங்குகள் மற்றும் பறவைகளின் நலம் காக்கும் கால்நடை மருத்துவப் பணியாளர்களின் உன்னத சேவையைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல்கடைசி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து மதுரை கால்நடை பராமரிப்புத் துறை நோய் புலனாய்வுப் பிரிவு டாக்டர் எம்.எஸ். சரவணன் கூறியதாவது:

மருத்துவத் துறையில் மனிதர்களுக்கு வரும் 10 நோய்களில் 6 நோய்கள் விலங்குகள் மற்றும் பறவைகள் மூலம் பரவுகிறது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் மற்றும் ரேபிஸ் நோய் போன்ற நோய்கள் சில உதாரணங்கள் ஆகும்.

இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பெருந்தொற்று நோயும் பறவைகள், விலங்குகள் மூலம் மனிதருக்குப் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கும், மனிதர்களில் இருந்து விலங்குகளுக்கும் பரவும் நோய்களை ஜூனாடிக் நோய்கள் என அழைக்கிறோம். கால்நடை மருத்துவர்கள் தங்கள் தினசரிப் பணியில் கையாளும் 500 வகையான ஜூனாடிக் நோய்களில் 300 வைரஸ் நோய்களாகும். இந்த ஜூனாடிக் நோய்களைத் தடுப்பதும், கட்டுப்படுத்துவதும் கால்நடை மருத்துவர்களின் அன்றாடப் பணியாகும்.

உலகில் மனிதர்களுக்கு முதன்முதலில் கண்டுபிடித்தது பெரிய அம்மை தடுப்பூசி. பசு மாடுகளின் மடியில் ஏற்படும் மடி அம்மை நோய், பால் கறக்கும் கறவையாளர்களின் கைகளில் பரவுவது கண்டறியப்பட்டு, கால்நடை மருத்துவர்கள் மூலம்முதல் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மனிதர்களுக்கு பெரிய அம்மை நோய் தடுப்பூசி மாட்டின் அம்மை நோய் கிருமிமூலம் தயாரித்துப் பயன்படுத்தப்பட்டது.

மாடுகளுக்கு ஏற்படும் டிபி. நோயைத் தடுப்பதில் கால்நடை மருத்துவர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இத்தொழில் நுட்பமே மனிதர்களுக்கும் டிபி. நோயைத் தடுப்பதில் முன் உதாரணமாகப் பயன்படுத்தப்பட்டது.

பன்றிகளுக்கு ஏற்படும் பன்றிக் காய்ச்சல் குறித்து முதல் தகவல் அறிக்கை அளித்தது கால்நடை மருத்துவர்களே. பன்றிக் காய்ச்சல் தடுப்பு தொழில்நுட்பம் உலகின் முதல் மனித தடுப்பூசிப் பணிக்கு முன்னோடியாகும்.

பன்றிப் பண்ணைகளில் பரவிய இன்புளுயன்சா நோய் மற்றும் நிபா வைரஸ் நோய்க்கு கால்நடை மருத்துவர்களின் தடுப்பு உத்தியை மனிதனுக்கு இந்நோய் தாக்கியபோது முன்னோடியாகப் பயன்படுத்தப்பட்டது. நாய்கள் மற்றும் பிற விலங்குகள் மூலம் மனிதனுக்குப் பரவும் ரேபிஸ் நோயைத் தடுப்பதில் கால்நடை மருத்துவர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு உள்ள பல்வேறு நோய்களைப் பிராணிகள் வதைக் கூடத்தில் கண்டறிந்து மனிதர்களுக்குப் பரவாமல் தடுக்கும் பணியில் பிராணிகள் வதைக்கூடத்தில் பணியாற்றி வரும் கால்நடை மருத்துவர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x