Published : 23 Apr 2021 09:21 PM
Last Updated : 23 Apr 2021 09:21 PM
கொம்மேஸ்வரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த தகவலின் பேரில் கூட்டுறவு துறை அதிகாரி நேற்று விசாரணை நடத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியில் கொம்மேஸ்வரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த கடன் சங்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு விவசாயிகளுக்கு உழவு மாடு வாங்க 27 நபர்களுக்கு தலா ரூ.70 ஆயிரம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடன் பெற்றவர்கள் இதுவரை அந்த கடனை திருப்பி செலுத்தவில்லையென கூறப்படுகிறது. மேலும் கடன் வாங்கியவர்கள் நகர பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கிராம பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கடன் வழங்கப்படவில்லையென்ற புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் கடன் பெற்றவர்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு கூட்டுறவு துறை சார் பதிவாளர் பூவண்ணன் சார்பில் அண்மையில் அழைப்பு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அந்த கடன் சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும், குறிப்பிட்ட தேதியில் நேரில் ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டுமென அழைப்பு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கூட்டுறவு சார் பதிவாளர் பூவண்ணன், கொம்மேஸ்வரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இன்று வந்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் தனித்தனியாக அவர் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து கூட்டுறவு சங்க சார்பதிவாளர் பூவண்ணனிடம் கேட்போது அவர் கூறியதாவது, ‘‘கடந்த 2019-ம் ஆண்டு உழவு மாடு வாங்குவதற்கு விவசாயிகள் 27 பேருக்கு தலா ரூ.70 ஆயிரம கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய்வு முழுமையாக நடந்து முடிந்த பிறகு தான் முழு விவரம் தெரியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT