Last Updated : 23 Apr, 2021 04:52 PM

 

Published : 23 Apr 2021 04:52 PM
Last Updated : 23 Apr 2021 04:52 PM

ஸ்டெர்லைட் வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி: தூத்துக்குடி கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு; எதிர்ப்பாளர்கள்- ஆதரவாளர்கள் மோதல்

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பாரபட்சமின்றி அனைவரையும் அனுமதிக்கக் கோரி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். | படங்கள்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளிப்பது தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்கள் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க எந்தச் சூழ்நிலையிலும் அனுமதி அளிக்கக்கூடாது என ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர்.

ஆக்சிஜன் உற்பத்தி

நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2-வது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் குவிந்து வருகின்றனர். கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் போதுமான ஆக்சிஜன் இல்லாமல், நாடு முழுவதும் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆக்சிஜனை உற்பத்தி செய்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கத் தயாராக இருப்பதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கோரியது.

கருத்துக் கேட்புக் கூட்டம்

இதையடுத்து இந்த விவகாரத்தில் ஆலை அமைந்துள்ள தூத்துக்குடி பகுதி மக்களின் கருத்துக்களை அறிவதற்காக தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கத்தில் இன்று அவசர கருத்துக்கேட்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று இரவில் தொலைபேசி வாயிலாகச் சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கூட்டத்தில் பங்கேற்க முதலில் 14 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த 14 பேரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆவர். தொடர்ந்து இரவில் மேலும் 6 பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இந்த 6 பேரும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள். இவர்கள் 20 பேர் மட்டுமே கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தர்ணா போராட்டம்

காலை 8 மணி முதல் 9 மணி வரை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 7.30 மணியில் இருந்தே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பலர் ஆட்சியர் அலுவலகத்தில் குவியத் தொடங்கினர். ஆனால், காவல் துறையினர் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட 20 பேர் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு, அதில் இடம் பெற்றுள்ள நபர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை உள்ளே வரவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்கள்.

இதையடுத்து, பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் அனுமதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் அமமுக கட்சியினர் உள்ளிட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சுமார் 100 பேர் ஆட்சியர் அலுவலகப் பிரதான நுழைவு வாயில் முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தைத் தொடர்ந்து மேலும் சிலரைக் கூட்டத்தில் பங்கேற்க போலீஸார் அனுமதித்தனர்.

ஆட்சியர் தலைமையில் கூட்டம்

மொத்தம் 60 பேர் கூட்டத்தில் பங்கேற்றுக் கையெழுத்திட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தான். 10-க்கும் குறைவான எண்ணிக்கையில்தான் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து காலை 8 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் கூட்டம் தொடங்கியது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சுகாதாரத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சிப்காட் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 8 அலுவலர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய ஆட்சியர் செந்தில் ராஜ், ’’ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிப்பதில்லை என்ற தனது நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இதே கருத்தைத்தான் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் ஆக்சிஜன் நிலையத்தை மட்டும் இயக்க அனுமதிக்கலாமா என்பது குறித்த உங்களது கருத்துக்களை அறியவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது’’ என்றார்.

கடும் எதிர்ப்பு

தொடர்ந்து பேசிய பெரும்பாலானவர்கள் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் நிலையத்தை இயக்க அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதித்தால் அதனைப் பயன்படுத்திக் குறுக்கு வழியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அந்நிறுவனம் முயற்சி செய்யும். எனவே, நாட்டில் உள்ள மற்ற ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை எந்த நிலையிலும் திறக்கக்கூடாது என வலியுறுத்தினர்.

தொடர்ந்து பேசிய ஆட்சியர், ’’ஆக்சிஜன் நிலையத்தைத் தமிழக அரசே ஏற்று நடத்தினால் அனுமதிக்கலாமா?’’ என கேட்டார். அதற்கும் அனுமதிக்கக் கூடாது என்றே பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்தனர். அப்போது ஸ்டெர்லைட் ஆதரவாளர் ஒருவர் எழுந்து ஆதரவாகக் கருத்துத் தெரிவிக்க முற்பட்டார். உடனே எதிர்ப்பாளர்கள் அனைவரும் அவருக்கு எதிராக கூச்சல் போட்டதுடன், அவரைத் தாக்கவும் முயன்றனர். இதையடுத்து அவரை அதிகாரிகள் பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றினர். தொடர்ந்து ஆதரவாளர்கள் யாருமே கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கவில்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. உடன் எஸ்பி எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் உள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை அழிக்க வேண்டும்

நிறைவாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எழுத்துப்பூர்வமாக ஒரு மனுவை ஆட்சியரிடம் அளித்தனர். அதில், ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாகப் பிரித்து அழித்துவிட்டு, இங்கிருந்து அகற்றிவிட்டு அந்த நிலத்தைத் தமிழக அரசு கையப்படுத்தி, அதில் தமிழக அரசே நேரடியாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனத்தை நிறுவி நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி குறுக்குவழியில் சதித் திட்டத்தோடு ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதித்தால் பொதுமக்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1 மணி நேரம் இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. மக்களின் கருத்துக்கள் அரசுக்கு தெரிவிக்கப்படும் எனக் கூறி, கூட்டத்தை ஆட்சியர் நிறைவு செய்தார். அதன் அடிப்படையில் கருத்துக் கேட்பு கூட்டம் தொடர்பான அறிக்கையை ஆட்சியர் உடனடியாகத் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார்.

கூட்டம் முடிந்து 9 மணியளவில் அனைவரும் வெளியே வந்துவிட்ட போதிலும், எதிர்ப்பாளர்கள் பலர் பகல் 12 மணி வரை ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியிலேயே காத்திருந்தனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகுதான் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் காத்திருந்தனர். ஆனால், வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டதை அறிந்ததும் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பகல் 12 மணிக்குப் பிறகே ஆட்சியர் அலுவலக வளாகம் சகஜ நிலைக்கு திரும்பியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x