Published : 22 Apr 2021 08:58 PM
Last Updated : 22 Apr 2021 08:58 PM
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கோவை சரகத்துக்குட்பட்ட மாவட்ட சிறைகள், கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை சரக சிறைத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், கோவை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் தலா ஒரு மத்திய சிறைகள் உள்ளன. இங்கு தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள், குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், மாவட்டச் சிறைகள், கிளைச் சிறைகள் என இரண்டு வகைகளையும் சேர்த்து 23 சிறைகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள், வழக்கறிஞர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வந்து பார்த்துச் செல்வது வழக்கம்.
தற்போதைய சூழலில், தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், உள்ளாட்சித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதேபோல், சிறை வளாகங்களிலும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, தடுப்பு நடவடிக்கைகளை சிறைத்துறை நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கோவை சரக சிறைத்துறை நிர்வாகத்துக்கு உட்பட்ட மத்திய சிறைகளை தவிர்த்து, மற்ற அனைத்து சிறைகளிலும் கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள்
இதுதொடர்பாக கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் இன்று கூறும்போது,‘‘ கோவை சரகத்துக்கு உட்பட்ட சிறைகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறது. இங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு துவைத்து பயன்படுத்தக்கூடிய முகக்கவசம் தலா 2 வழங்கப்பட்டுள்ளது.
சிறை வளாகத்தில் கைதிகள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், தனிநபர் இடைவெளியை முறையாக கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள் முன்பு தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது ஒரு லட்சம் முகக்கவசங்கள் இருப்பில் உள்ளன. இவை சிறை பஜார் மூலம் விற்கப்படுகிறது.
கோவை மற்றும் சேலம் மத்திய சிறையில் கைதிகளை பார்வையாளர்கள், வழக்கறிஞர்கள், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்படவில்லை. அதே சமயம், கோவை சரகத்தக்குட்பட்ட அவிநாசி, பொள்ளாச்சி, உடுமலை, கோபி, சத்தி, பவானி, ஊட்டி, குன்னூர், கூடலூர், சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல், பரமத்தி, ராசிபுரம், ஓமலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 23 இடங்களில் உள்ள மாவட்ட மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்க கடந்த 20-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க, புதியதாக வரும் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் 10 முதல் 14 நாட்களுக்கு கிளைச் சிறைகள், மாவட்டச் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். அதன் பின்னர், கோவை அல்லது சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தனிச்சிறையில் ஒரு வாரத்துக்கு அடைக்கப்படுகின்றனர். அதன் பின்னரே, மத்திய சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.
மேலும், கோவை மற்றும் சேலம் மத்திய சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது உறவினர்களை செல்போன் வீடியோ கால் மூலம் சந்தித்துப் பேசவும், சிறையில் உள்ள தொலைபேசி மூலம் பேசவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT