Published : 22 Apr 2021 07:14 PM
Last Updated : 22 Apr 2021 07:14 PM
தான் சிகிச்சை அளித்தது குறித்து அவதூறு பரப்பியதற்காக 3 நாட்களில் ரைசா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மானநஷ்ட வழக்குத் தொடருவேன் என்று வழக்கறிஞர் மூலம் தோல் சிகிச்சை மருத்துவர் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தோல் சிகிச்சை மருத்துவர் ஒருவரிடம் நடிகை ரைசா வில்சன் முகப்பொலிவு சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதன் பின்னர் அவர் கண்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டதாகப் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்
தனக்கு ஏற்பட்ட விளைவுகளுக்குத் தவறான சிகிச்சையே காரணம் என்பதால் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி ரைசா வில்சன், தோல் சிகிச்சை மருத்துவருக்குத் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக தோல் சிகிச்சை மருத்துவரும் பதிலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்குமாறு கோரியுள்ளார்.
ரைசாவுக்கு சிகிச்சை அளித்த தோல் சிகிச்சை மருத்துவர் அவரது வழக்கறிஞர் ஆர்.நாகேஷ்வரராவ் மூலமாக, நடிகை ரைசா வில்சனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், “தோல் ஆரோக்கியம், முகப்பொலிவுக்காக என்னை அணுகியபோது, சிகிச்சைக்கு ஒப்புக்கொள்வதாகத் தானாக முன்வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ரைசாவிற்கு ஏற்பட்டுள்ளது பயப்படக்கூடிய பக்க விளைவுகள் இல்லை. அரிதாக ஏற்படக்கூடிய விளைவுதான். இயற்கையாகவே குணமடையக்கூடிய ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், திடீரென சிகிச்சை குறித்து உண்மைக்குப் புறம்பான அவதூறான கருத்துகளை அவர் வெளியிட்டு வருவதாகவும், மற்ற வாடிக்கையாளர்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் ரைசாவின் செயல் உள்ளதாகவும், மக்கள் மத்தியில் தனக்குள்ள நற்பெயரைச் சீர்குலைக்கும் நோக்கில் ரைசா நாடகம் ஆடுவதாகவும் தோல் சிகிச்சை மருத்துவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தை மேற்கோள் காட்டி ஏராளமான வாடிக்கையாளர்கள் கேட்பதால் உளவியல் ரீதியாக தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மூன்று நாட்களில் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரைசா வில்சனுக்கு தோல் சிகிச்சை மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மன்னிப்பு கோரி அதை சமூக வலைதளங்களில் ரைசா வில்சன் வெளியிட வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் மான நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தோல் சிகிச்சை மருத்துவரின் வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT