Published : 22 Apr 2021 05:40 PM
Last Updated : 22 Apr 2021 05:40 PM
ஆக்சிஜனை ஆந்திராவுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன என்று மத்திய அரசிடம் ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளரும் மருத்துவருமான எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் கலந்துகொண்டு பொருட்களை வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’கல்வியும் சுகாதாரமும் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு வந்தால்தான் பேரிடர்க் காலங்களில் நம்மால் சமாளிக்க முடியும். நமக்கே தட்டுப்பாடு இருக்கும்போது வெளி மாநிலத்துக்கு ஆக்சிஜனை ஏற்றுமதி செய்வது ஏன். ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஆக்சிஜன் ஆந்திரப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
நம்முடைய சுகாதாரத்துறை அமைச்சர் எங்களைக் கேட்காமலேயே 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரப் பிரதேசத்திற்கு அனுப்பி விட்டனர் என்கிறார். ஆந்திராவுக்கு விசாகப்பட்டினத்தில் ஆக்ஸிஜன் உருவாக்கும் மையம் உள்ளது. தமிழகத்திலேயே தட்டுப்பாடாக இருக்கும்போது ஆந்திராவுக்கு ஆக்ஸிஜனைக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
தமிழ்நாட்டில் இப்போது ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறையாக உள்ளது. நிலைமை கைமீறிப் போன பிறகு பிரதமர் மோடி, மாநில அரசுகளிடம் நீங்கள் சந்தையில் கரோனா மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என்கிறார். அதே நேரத்தில் மாநில அரசுக்கு 400 ரூபாய்க்கும் தனியாருக்கு 600 ரூபாய்க்கும் தடுப்பூசி விலை வைத்து விற்கப்படுகிறது. இதுவே மத்திய அரசுக்கு ரூ.150 ஆக உள்ளது. ஒரே தடுப்பூசிக்கு எப்படி 3 விலை இருக்க முடியும்?
கரோனா தடுப்பு மருந்துகள் கையிருப்பு எவ்வளவு, கொள்முதல் எவ்வளவு என்பதை மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும். மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள், ஆக்சிஜன் வசதி ஆகிய வசதிகள் உள்ளனவா? மருத்துவர்கள், செவிலியர்கள் போதிய அளவு உள்ளார்களா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்று மருத்துவர் எழிலன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT