Published : 22 Apr 2021 02:12 PM
Last Updated : 22 Apr 2021 02:12 PM
கோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாகத் தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை திமுக நிர்வாகியான சூலூர் ஏ.ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் சென்றுள்ளார். அவருக்கு நீரழிவு பிரச்சினை இருப்பதால் மேல்படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழ் படுக்கையில் இருந்த பெண்ணின் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையில் அந்தப் பெண் வாய்மொழிப் புகார் அளித்த நிலையில், தனது செயல்பாடு உள்நோக்கத்துடன் நடந்தது இல்லை என்றும், நீரிழிவு பிரச்சினை இருப்பதால் அவசரமாக இறங்கியதாகவும் சூலூர் ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதன் பின்னர் தன் புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டாமென அந்தப் பெண் தெரிவித்துள்ளார். ஆனால், 15 நாட்களுக்குப் பிறகு சூலூர் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுகுறித்து தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பேசியதாகக் கூறப்படுகிறது.
ரயில் பயணத்தின்போது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரங்களில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதாக முதல்வர் பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு எதிராக சூலூர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரில் பதிவான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவதூறாகப் பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டுமெனவும், இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.
முதல்வர் பழனிசாமிக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு மட்டும் நீதிபதி வி.பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சூலூர் ராஜேந்திரன் வழக்கு குறித்து முதல்வர் பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 10ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT