Published : 22 Apr 2021 01:13 PM
Last Updated : 22 Apr 2021 01:13 PM
கரோனா நோயை ஒழிப்பதில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்திருப்பதாக, கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (ஏப். 22) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா தொற்று பரவியது முதற்கொண்டு அதை எதிர்கொள்வதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தெளிவான அணுகுமுறையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
கரோனாவை 21 நாளில் ஒழிப்பதாகக் கூறிய பிரதமர் மோடியால், 15 மாதங்களாகியும் ஒழிக்க முடியவில்லை. நேற்று ஒரு நாள் பாதிப்பு மட்டும் 3 லட்சத்து 15 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. உலக நாடுகளில் கரோனா எண்ணிக்கையில் இத்தகைய உச்சத்தை இந்தியா தவிர வேறு எந்த நாடும் எட்டியதில்லை.
ஒரே நாளில் 2,091 பேர் பலியாகி இருக்கிறார்கள். இன்றைக்கு 1 கோடியே 59 லட்சம் பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, இதுவரை 1 லட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மடிந்திருக்கிறார்கள். கரோனா நோயை ஒழிப்பதில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்த நிலையில், தற்போது இரண்டாவது அலையை எதிர்கொள்ள முடியாமல் தட்டுத் தடுமாறி திணறிக் கொண்டிருக்கிறது.
கொடிய கரோனா நோயினால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரே பாதுகாப்பு தடுப்பூசி போடுவதுதான். அதில், தெளிவான அணுகுமுறை இல்லாத காரணத்தால் ஏப்ரல் 20ஆம் தேதி நிலவரப்படி 12.27 கோடி மக்களுக்குதான் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள்தொகையில் 9 சதவிகிதம் ஆகும்.
ஆனால், இஸ்ரேல் மக்கள் தொகையில் 61.8 சதவிகிதமும், அமெரிக்காவில் 39.20 சதவிகிதமும், அண்டை நாடான பூட்டானில் 67.4 சதவிகிதமும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் 1 கோடி மக்களுக்குதான் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மத்திய அரசு தடுப்பூசி போடுவதில் முதல் இலக்காக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுகிற திட்டத்தை அறிவித்தது. இதன்படி, 137 மில்லியன் மக்களுக்கும், அடுத்து ஏப்ரல் 1ஆம் தேதி இலக்கின்படி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதாக அறிவித்ததால் கூடுதலாக 207 மில்லியன் மக்களும், இறுதியாக மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என்று அறிவித்ததால் கூடுதலாக 595 மில்லியன் மக்களுக்கும் தடுப்பூசி போடுவதாக அறிவித்திருக்கிறது.
இதன்படி, மொத்தம் 94 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ் வீதம் 188 கோடி டோஸ் தடுப்பூசி போட வேண்டிய அவசிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 30 லட்சம் டோஸ்தான் போடப்படுகிறது. இதன்படி, பார்த்தால் இலக்கு நிர்ணயித்தபடி அனைவருக்கும் தடுப்பூசி போட 626 நாட்கள் தேவைப்படும். இதை நினைக்கிறபோது கரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் 136 கோடி மக்களை பிரதமர் மோடி அரசால் காப்பாற்ற முடியுமா? என்கிற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. இதற்குரிய எந்தத் தீர்வும் மத்திய அரசிடம் இல்லை.
இந்நிலையில்தான் மாநில அரசுகளும், தனியார் துறையும் நேரடியாக தடுப்பூசி கொள்முதலைச் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன்மூலம் மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து பொறுப்பற்ற நிலையில் செயல்பட்டிருக்கிறது.
பாராட்டு என்றால் மத்திய அரசு உரிமை கொண்டாடுவதும், பிரச்சினை என்றால் மாநில அரசின் தலையில் சுமத்துவதும்தான் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சியா?
கரோனாவில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்காக தடுப்பூசி திருவிழா நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யாமல் தேர்தல் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, கரோனாவைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்.
உலக நாடுகளின் தடுப்பூசி தேவையில் 70 சதவிகிதத்தைத் தயாரிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்று பேசிய அமித் ஷா, இன்றைக்கு கரோனா ஒழிப்பில் ஈடுபடாமல், மம்தா பானர்ஜியை ஒழிப்பதில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.
மத்திய அரசுக்கு 15 கோடி தடுப்பூசிகளை ரூபாய் 150 விலையில் சீரம் நிறுவனம் வழங்கி வந்தது. மேலும், 11 கோடி தடுப்பூசிகள் வழங்குகிற முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், தடுப்பூசி நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்ததால் இன்றைக்கு மத்திய அரசுக்கு ரூபாய் 400 விலையும், மாநில அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு ரூபாய் 600 விலை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரே நாடு - ஒரே வரி, ஒரே நாடு - ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே நாடு - ஒரே தேர்தல் என்று அனைத்திலும் ஒற்றை முறையை அமல்படுத்திய பாஜக அரசு, தடுப்பூசியில் மட்டும் ஒரே நாடு, பல விலைகள் என்று அறிவித்தது ஏன்?
உலக நாடுகளில் எங்கும், எந்த அரசும் மக்களின் உயிரைக் காப்பாற்றும் தடுப்பூசி திட்டத்தை சந்தை நிலவரத்திற்கேற்ப முடிவெடுக்கும் நிலையைத் தனியாருக்கு தாரை வார்த்ததில்லை. தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்காமல் தடுப்பூசி விலை கட்டுப்பாட்டை அகற்றியது ஏன்?
இதன்மூலம் கரோனா காலத்தில் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும், கள்ளச் சந்தை பெருகவும் மோடி அரசு துணை போயிருக்கிறது. இதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்த நிலையில், அதிக லபாம் ஈட்டும் வகையில், மருந்து தயாரிப்பு நிறுவனங்களையே விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிப்பது ஆபத்தான விளையாட்டாகும்.
இரண்டாவது அலை நாட்டு மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 19 ஏப்ரல் 2021இல் தெரிவித்த தகவலின்படி 6.60 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.
அதேபோல, கடந்த ஆறு மாதங்களில் 11 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவமனைகளில் மிக முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிற ஆக்சிஜன் கடந்த 2020-21 நிதியாண்டில் முதல் பத்து மாதங்களில் இரண்டு மடங்கு ஆக்சிஜனை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மூலம் இந்தியா விற்பனை செய்திருக்கிறது.
இதன்படி, இந்தியா 9,301 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்தியாவில் உற்பத்தியான ஆக்சிஜனை ஏற்றுமதி செய்துவிட்டு, தற்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் இறக்குமதி செய்ய மோடி அரசு ஒப்பந்தப் புள்ளி கோரியிருக்கிறது.
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வழங்க முடியாமல் நாடு முழுவதும் பற்றாக்குறை நிலவுகிறது. மருத்துவமனைகளில் பலர் உயிரிழந்து வருகிறார்கள். இதற்கு மத்திய பாஜக அரசுதான் பொறுப்பாகும்.
இந்நிலையில், தடுப்பூசி, ஆக்சிஜன், உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இந்திய மக்களின் உயிரோடு விளையாடி வருகிற மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் மக்கள் என்றைக்குமே மன்னிக்க மாட்டார்கள். இத்தகைய கொடூரமான நிலைக்குக் காரணமானவர்களுக்கு உரிய பாடத்தை, உரிய நேரத்தில் மக்கள் புகட்டுவார்கள்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT